சிறுவர்கள் படுக்கைக்குச் செல்ல அரை மணி நேரத்திற்கு முன் அவர்களை கணினியிலிருந்து விலக்கி வைக்கவும்!

Friday, July 30th, 2021

சிறுவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன், கணினித் திரைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், உளவியலாளருமான தீனா சொலமன்ஸ் தெரிவித்துள்ளார்.

இல்லையெனில், இது குழந்தைகளின் தூக்கத்தை பாதித்து, மன அழுத்தத்தை அதிகரிக்கக் காரணமாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதைய இணையவழி கல்வி முறையினால், பல குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணினிகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதனால், அவர்களுக்கு ஓய்வு தேவை என்றும் உளவியலாளர் தீனா சொலமன்ஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரித்தால், கோபம் ஏற்படுதல், கவனத்தை ஈர்க்கும் தேவைப்பாடு அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பெரும்பாலும் இந்த நாட்களில் பெற்றோரினதும் மன அழுத்தம் அதிகரிப்பதுடன், குடும்ப வன்முறைகளும் அதிகரிக்க நேரிடும் என்பதனால், பெற்றோர்களும் ஒரு நாளைக்கு சுமார் அரை மணி நேரமாவது ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: