சிறுவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும் – உலக சிறுவர் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, October 1st, 2022

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆலோசனைக்கமைய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பமானது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 1989 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய, 18 வயதிற்கு உட் பட்ட அனைத்துப் பிரஜைகளும் சிறுவர்களாகக் கருதப்படுவார்கள்.

1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய உலக வயோதிபர் தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டளவில் உலகில் 1200 கோடி மக்கள் வயோதிபர்களாக இருப்பார்கள் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாம் அனுபவிக்கும் பல உரிமைகளை எமக்கு பெற்றுத் தந்த வயோதிபர்களை கௌரவத்துடன் நன்றி கூற வேண்டும்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேசிய நிகழ்வு பத்தரமுல்ல செத்சிறிபாயவில் இன்று இடம்பெற்றது. ராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, சாந்த பண்டார ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது..

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடாளவிய ரீதியிலுள்ள அதிகளவான பாடசாலைகளில் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை நாளைமறுதினம்   திங்கட்கிழமையும் பல பாடசாலைகளில் உலக சிறுவர் தின வைபவஙகள் இடம்பெறவுள்ளன. பிரதேச செயலக மட்டத்திலும் சிறுவர் தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இன்றிலையில்

சிறுவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும் என உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம் அணுகக்கூடிய உலகம் அல்ல சிறுவர்களின் உலகம். அது மிகவும் எளிமையானது. அவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

பெரியவர்களாகிய நாம் இதை புத்திசாலித்தனமாக புரிந்துகொண்டு அவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –  சில ஆண்டுகளுக்கு முன்னர், சிறுவர்கள் வாழ்ந்த சமூகப் பின்னணியில் இருந்து தற்போதைய சமூகப் பின்னணி மிகவும் வித்தியாசமானது என்பது தெளிவாகிறது.

இத்தகைய பின்னணியில், நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் சரியான அளவு கலோரி அடங்கிய ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரச தலைவர் என்ற வகையில் எனது கடமையாகும்.

நாட்டின் தற்போதைய தலைமுறைக்கு போஷாக்கான உணவை வழங்குவதும், எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதுமே இத்தருணத்தில் எனது நோக்கமாகும்.

நான் முன்வைத்த கொள்கை அறிக்கையின் பிரகாரம், ஏழை மற்றும் வசதி குறைந்தவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடசாலை மாணவர்களுக்கு நிறை உணவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக 10 இலட்சத்து 80,000 பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவாக போஷாக்குள்ள நிறை உணவு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து நிபுணர்களின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாகும். அதேபோன்று, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, உணவுப் பாதுகாப்பு இல்லாத குடும்பங்களுக்கும் மேலதிக கொடுப்பனவு மற்றும் மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறுவர்களின் அழகிய குழந்தைப் பருவத்தையும், நமது நாட்டின் வளர்ச்சிக்காக அளவில்லா தியாகங்களைச் செய்த முதியோர் சமூகத்தையும் பராமரிப்பது நமது கடமையாகும். அது நமது கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

உணவு, கல்வி, விளையாட்டு, அழகியல், ஓய்வு, உறக்கம், மனநலம், உடல் ஆரோக்கியம் போன்றவை சிறுவர்களின் தேவைகளில் சிலவாகும். அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் கலாசார ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றுவது, அரசாங்கத்தைத் தவிர பெற்றோர், ஆசிரியர் மற்றும் சிவில் அமைப்புகளின் பொறுப்பாக நான் கருதுகிறேன்.

அனைத்து சிறுவர்களையும் முதியவர்களையும் நம் அன்புக்குரியவர்களாக கருதி, அவர்களை அன்புடன் பராமரிக்கும் ஒரு சகாப்தத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதிபூணுவோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: