சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு – மத்திய வங்கியின் ஆளுநரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

Sunday, November 21st, 2021

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய வங்கி ஆளுநரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வு இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

வட பிராந்தியத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் சிக்கல்களை கையாள்வதற்கான சாத்தியமான தீர்வுகள் மற்றும் உத்திகள் வழங்குவதை  நோக்காக கொண்டு இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்கள், வங்கிகளின் பிராந்திய பொது முகாமையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எனப்பலரும் பங்கேற்றனர்.

இதன்போது முதலீட்டாளர்களின்  பிரச்சினைகளைக் நேரடியாக கேட்டறிந்து கொண்ட மத்திய வங்கி ஆளுநர் அதற்கான தீர்வுகளை வட மாகாண ஆளுநர், அரச அதிபர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் பேசி அதற்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

முன்பதாக  மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை நேற்றையதினம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வசாவிளான் இயற்கை உர தோட்டம் உள்ளிட்ட சிலவற்றை பார்வையிட்டதுடன் பயனாளிகளுடனும் கலந்துரையாடியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: