சாதாரணதரம், உயர்தரம் சித்தியில்லாவிட்டாலும் தொழிற் கற்கையைப் பயில மாணவர்கள் பதிவு செய்யவும் – யாழ். மத்திய கல்லூரி அதிபர்!

Tuesday, May 1st, 2018

உயர்தர தொழில் பாடத்துறை கற்கைகள் யாழ்ப்பாணக் கோட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. கற்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் கே.எழில்வேந்தன் அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

பதின்மூன்று வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் உயர்தரத் தொழில் பாடத்துறையின் கீழ் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஜி.சி.ஈ. சாதாரணதரப் பரீட்சையில் 2017 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சித்தியடைந்தமை மற்றும் சித்தியடையாமை குறித்து கவனத்திற் கொள்ளப்படாது.

எனவே மாணவர்கள் எதுவித தயக்கமுமின்றி இந்தத் தொழிற் கற்கைகளைப் பெற முடியும். அதற்கான சிறந்த சந்தர்ப்பம் இது.

பொதுப்பாடத்துறை, பிரயோகப் பாடத்துறை, நிறுவனஞ்சார் தொழில்பயிற்சி ஆகிய மூன்று முக்கிய பாடத்துறைகளை ஒரு மாணவன் கற்க வேண்டும்.

தரம் 12 இல் பொதுப்பாடத்துறையும், பிரயோகப்பாடத்துறையும் கற்பிக்கப்படும். முதலாவது தவணையில் பொதுப் பாடத்துறையில் அடங்கும் ஒன்பது பாடங்களையும் இரண்டாம், மூன்றாம் தவணைகளில் பிரயோகப்பாடத்துறையில் அடங்கும் 26 பாடங்களில் விரும்பிய மூன்று பாடங்களையும் தெரிவு செய்து மாணவர்கள் கற்க வேண்டும்.

தரம் 13 இல் மேலே கற்க மூன்றில் ஒரு பாடத்தை தெரிவு செய்து கற்பதுடன் தொழில் பயிற்சிக்காக கல்வியமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கற்றல் பயிற்சியை மேற்கொள்ளல் வேண்டும். இவையனைத்தும் பாடசாலை நேரத்தினுள் வழமையான பாடவேளைகள் (40 நிமிடம்) போலல்லாது நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக அமையும்.

எனவே மேலே குறித்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலை நேரத்தில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து கையளிக்குமாறு வேண்டுகின்றோம். மேலதிக விவரங்களை அதிபர் அலுவலகத்தில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: