சவால்களை எதிர்கொண்டாலும் இலக்கை மறந்துவிடக்கூடாது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வலியுறுத்து!

Monday, June 7th, 2021

தற்போதைய சூழலில் சவால்களை ஒருபுறம் எதிர்கொள்ளும் அதேவேளை, மறுபுறம் ஏனைய துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தியுள்ளோம் என்று நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு மாநாடு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இணையவழியின் ஊடாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

முதலீட்டை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பொருத்தமான நேரம் இதுவல்ல என்று சிலர் கூறுகின்றார்கள். பெரும்பாலான உலகநாடுகள் முடக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், சுற்றுலாத்துறை போன்ற முக்கிய துறைகள் இயங்கமுடியாத தருணத்தில், இவ்வனைத்திற்கும் எப்போது தீர்வு காணப்படும் என்று இன்னமும் தெரியாத நிலையில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு முதலீட்டாளர்களிடம் எவ்வாறு கோரமுடியும் என்று வினவுகின்றார்கள்.

எனவே தற்போதைய நெருக்கடிமிக்க வேளையில் முதலீடுகள் தொடர்பில் பேசுவது சரியா? என்ற கேள்வி எழுகின்றது. நாடொன்றில் முதலீடுகளைச் செய்யும்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் முதலீட்டாளர்கள் பிரத்தியேமாக அவதானம் செலுத்தவேண்டும். அவை தொடர்பில் கலந்துரையாடக்கூடிய களமாகவே இந்த மாநாடு அமையும். இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி என்பது 2006 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

போர் இடம்பெற்றுவந்த காலப்பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவேண்டியதன் அவசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் போர் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது சமாதானத்திற்குத் தயாராவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவேதான் போர் முடிவிற்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியிலேயே அம்பாந்தோட்டைத் துறைமுகம், நுரைச்சோலை அனல்மின்னுற்பத்தி நிலையம், அதிவேக நெடுஞ்சாலைகள், விமானநிலையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

அதனால்தான் போர் முடிவடைந்ததன் பின்னர் மிகவேகமாக வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கக்கூடிய அடித்தளம் இலங்கையிடம் காணப்பட்டது. அதனாலேயே இலங்கையினால் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியினையும் அடைந்துகொள்ள முடிந்தது. இவை எவையும் சடுதியான இடம்பெற்ற மாற்றங்கள் அல்ல. மாறாகப் படிப்படியாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் கிடைக்கப்பெற்ற அடைவுகளாகும்.. தற்போது முதலீடு செய்யக்கூடிய கம்பனிகளினால் பெருமளவான இலாபத்தை ஈட்டிக்கொள்ள முடியும். கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை மற்றும் சவால்களின் காரணமாக நாம் ஒருபோதும் எமது இலக்கை மறந்துவிடக்கூடாது என்றும் அவர் மேலும்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: