சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்று பேச்சு அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும் – மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் தெரிவிப்பு!

Monday, October 10th, 2022

சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் வாரம் முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. 

அதன்படி நிதி இராஜாங்க அமைச்சரும், திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கி அதிகாரிகளும் அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, நாம் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டு இருதரப்பு மற்றும் பல்தரப்புக் கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். 

தெளிவூட்டல், காட்சிப்படுத்தல் மூலம் கடந்த மாதம் 23ஆம் திகதி இது குறித்து அனைத்துக் கடன் வழங்குனர்களுக்கும் விளக்கமளித்தோம். இருதரப்புக் கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்’ என்று சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அதேவேளை ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின்போது அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகளுடனும், இங்கிலாந்து விஜயத்தின்போது அரச தலைவர்கள் சிலருடனும், மணிலாவில் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ‘கடன் மறுசீரமைப்பினூடாக முதலாவதாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியைப் பெறுவதற்கும் இரண்டாவதாக உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களிடமிருந்தும் உதவிகளைப் பெறுவதற்கும் எதிர்பார்க்கின்றோம்.

அதுமாத்திரமன்றி மூன்றாவதாக கடன்மறுசீரமைப்பின் ஊடாக மீளச்செலுத்த வேண்டியுள்ள கடன்களின் அளவைப் பெருமளவுக்குக் குறைத்துக்கொள்வதன் மூலம் வெளிநாட்டுக்கையிருப்பின் அளவை சாதகமான மட்டத்துக்குக் கொண்டு வருவதற்கும், முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் எதிர்பார்க்கின்றோமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: