சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே நெருக்கடிக்கு தீர்வு – கடன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவால் ஆலோசனைக் குழுவொன்றும் நியமனம்!

Thursday, April 7th, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே ஒரே தீர்வு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு நிலையான அரசாங்கம் ஒன்று இலங்கையில் இருக்க வேண்டுமெனவும் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்க்கட்சிகள் முன்வந்து அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவால் ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல் மற்றும் இலங்கையின் நிலையான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டுதல்களை வழங்குதல், ஆகியன இந்த ஆலோசனைக் குழுவின் பொறுப்புக்களாகும்.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் பேராசிரியர் சாந்தா தேவராஜன், சர்வதேச நாணய நிதியத்தின் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதி பணிப்பாளர் கலாநிதி ஷர்மினி குரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், அரச தலைவரை சந்தித்து, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் உரிய தேவைகளுக்கான தொடர்பாடல்களை தொடர்ந்தும் பேணுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அரச தலைவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: