சர்வதேச சமுத்திர தினம் இன்று !

Saturday, June 8th, 2024

சர்வதேச சமுத்திர தினம் இன்றாகும். இன்றைய நாளிற்கான தொனிப்பொருள் பெருங்கடலின் ஆழத்தைப் புதுப்பித்தல் என்பதாகும்.

1992 ஆம் ஆண்டு இது போன்று ஒரு நாளில் பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ நகரில் புவி மாநாடு இடம்பெற்றது.

இதன்போது சமுத்திரங்களினால் மனித சமூகத்திற்கு கிடைக்கப் பெறும் வளங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கனடா முன்வைத்தது.

பின்னர் இந்த கோரிக்கை 2008 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சர்வதேச பெருங்கடல் அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

அன்றுமுதல் வருடந்தோறும் ஜுன் 8 ஆம் திகதி சர்வதேச சமுத்திர தினமாக அறிவிக்கப்பட்டது.

பூமியில் சுமார் 70 சதவீதமான பகுதி சமுத்திரங்களினால் வியாபித்துள்ளதுடன் பூமிக்கு தேவைப்படும் 50 சதவீத ஒட்சிசனை சமுத்திரங்களே உற்பத்தி செய்கின்றன.

சமுத்திரங்களை நம்பி அன்றாடம் தமது வாழ்வாதாரங்களைக் கொண்டு செல்லும் மக்களின் தொகை எண்ணில் அடங்காதவை.

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு புரத உணவிற்கான ஆதாரமாகவும் முக்கிய போக்குவரத்துப் பாதையாகவும் சமுத்திரங்கள் அமைந்துள்ளன.

உலகில் நீர் வளம், மீன் வளம் மற்றும் இதர கடல்சார் செயற்பாடுகளுக்கும் மிக முக்கியமான ஆதாரமாக சமுத்திரங்கள் அமைந்துள்ளன.

ஆனால் மனிதனின் சுயநலத்தினால் சமுத்திரங்கள் தற்போது அழிவடைந்து வருகின்றன என்றால் மிகையாகாது.

கடல் கொந்தளிப்பு, காலநிலை மாற்றம் என்பவற்றிற்கு மனிதனின் பொறுப்பற்ற நடத்தைகளே காரணம்.

இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளினால் உருவாகும் வளி மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில் வலுவானதோர் உடன்படிக்கையை ஐ.நா கொண்டு வரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் புலனாய்வு நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

அத்துடன் பிளாஸ்டிக் பாவனையினால் பூமி கொடிய அபாயங்களை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

இந்த மாசுபடுத்தல் அலை  கட்டுப்படுத்தப்படா விட்டால் 2040ஆம் ஆண்டளவில் கடலிலுள்ள மீன்களின் மொத்த அளவைவிட பிளாஸ்டிக் அளவு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 8.8 மில்லியன் டன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சமுத்திரங்களில் சேர்கின்றன.

உலக சமுத்திரத்தின் ஒவ்வொரு சதுர கிலோமீற்றரிலும் 18,000 பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பதுடன் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் மரணிக்கின்றன.

ஆழி சூழ் உலகு என்பதற்கு ஏற்ப இவ்வுலகில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. இயற்கை நமக்கு அளித்துள்ள வளங்களிலே நீர் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.

நீர் வளப் பாதுகாப்பினை மேற்கொள்ளாவிடின் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

நீர் இல்லாத பாலை நிலத்தில் வாழ்க்கை எவ்வாறிருக்கும்? என்பதை நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் சமுத்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது எமது தலையாயக் கடமையாகும்.

000

Related posts: