சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாடு எதிர்நோக்கும் சவால்கள் இன்றும் முடிவுக்கு வரவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, November 29th, 2023

நாடு சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாடு எதிர்நோக்கும் சவால்கள் முடிவுக்கு வரவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கும் இலக்குகளை அடைந்துகொள்ள அனைவரும் ஒற்றுமையாக பொறுமையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படை நியதிகளுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறு சகல அரச மற்றும் தனியார் துறையினரிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இலங்கை தமது கடன்களை நிர்வகிக்கக்கூடிய நிலையான தன்மைக்கு வந்துள்ளதென சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக மாத்திரம் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது எனவும் கடன்களை மீளச் செலுத்துவதற்கான சலுகை வட்டியை கோரிய பின்னரே கடன்களை செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வலுவான பொருளாதாரமொன்று அவசியமாகும் எனவும் இதன்போது ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது. என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அமைதியாக நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும். இதை எவரும் இனவாத ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது.” – என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் “தேசிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள்.

எனவே, தீர்வை நாம் விரைவில் வழங்க வேண்டும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்போதும் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.” – என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: