சரிந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது – நிதி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, July 12th, 2021

சரிந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவை அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அனைவரும் இதற்காக நிர்வாக மட்டத்திலான தங்கள் முழு ஆதரவை வழங்கவேண்டும் எனவும் கோரியுள்ளார்.

அத்துடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தடுப்பூசி நடவடிக்கைக்கு பின்னர் நாட்டை மீண்டும் முழுமையாக திறக்க வேண்டிய அவசியம் குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.  

பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் கட்டுப்படுத்தினால் நெருக்கடி நிலைமை அதிகரித்து வேலையின்மை மற்றும் வறுமை அதிகரிக்கும் என்றும் பசில் ராஜபக் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டினை முழுமையாக திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதேநேரம் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நிதி அமைச்சகத்தில் பல சிறப்பு அமர்வுகள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சகங்களுக்கான செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் பொருளாதார மேம்பாடு மற்றும் அதன் எதிர்கால செயல் திட்டம் குறித்த கலந்துரையாடல் ஒன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது விவசாயம், வாழ்வாதாரங்கள், உள்கட்டமைப்பு, சமூக உள்கட்டமைப்பு, பொது பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாடு குறித்த செயல்திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் உள்ளூர் விவசாயத் தொழிலில் ஒரு புதிய திருப்புமுனையைக் இயற்க்கை உரங்களைப் பயன்படுத்தும் செயல்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடையம் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்வியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் வண்ணம் உத்தரவிடப்பட்டது.

கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை புதுப்பிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வாழ்வாதார துணைக்குழு விவாதித்தது. சுகாதார அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்களை விரைவில் திறக்க ஏற்பாடு செய்யுமாறு பசில் ராஜபக்ச அமைச்சர்களுக்கு இதன்போது அறிவுறுத்தியிருந்தார்.

மேலும் உள்கட்டமைப்பு துணைக்குழுவில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களால் முன்மொழியப்பட்ட மற்றும் நடந்து கொண்டிருக்கும் வீட்டுத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தவும், அவற்றைப் பராமரிக்க மேலும் நடவடிக்கை எடுக்கவும் இதன்பொழுது அறிவிக்கப்பட்டது.

சமூக உள்கட்டமைப்பு தொடர்பான துணைக்குழு உள்ளூர் மட்டத்தில் வளர்ச்சியை மேற்பார்வையிடுவதோடு, வேலையின்மையைக் குறைப்பதற்கான சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்குவதற்காக சுயதொழில் கொள்கை அறிக்கைக்கு ஏற்ப திட்டமிடப்பட்ட வளர்ச்சி நடவடிக்கைகளையும் கண்காணிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நிதி அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் நாட்டின் பல நிறுவனங்களில் ஊழல் மற்றும் மோசடிகளை இடம்பெறுகிறது அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பொது பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான துணைக்குழு கவனம் செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பொது சேவையை பொதுமக்களுக்கு விரைவாக வழங்கக்கூடிய சூழலை உருவாக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் அதில் சிறப்பு நிர்வாக மேலாண்மையை உருவாக்கவும் அவர் வலியுறுத்தியதுடன்,

நிதி அமைச்சகத்தால் ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமித்து, அமைச்சக மட்டத்தில் இருந்து நிதி அமைச்சகத்தை கையாள்வதில் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுமாறு கட்டமைப்பை உருவாக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: