சம்பந்தன்,சுமந்திரனுக்கு அனுமதி கொடுத்தது யார்? – முன்னாள் எம்.பி. சுரேஸ் கேள்வி!

Saturday, March 11th, 2017

தமிழ் மக்களது போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் EPRLF கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை, சுயநலத்திற்காக முன்னெடுக்கப்படும் போராட்டம் என சுமந்திரன் கூறியுள்ளார்.

அரசாங்கத்தையும் முப்படைகளையும் பாதுகாக்கும் விதத்திலும், பிரச்சினையை திசை திருப்பும் நோக்கிலேயே சுமந்திரன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரச்சினை தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரனும், சம்பந்தனும் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்து செயற்பட்டு வருகின்றனர்.

வட கிழக்கு இணைப்பு என்பது தமிழ் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படைகளில் ஒரு முக்கியமான விடயம். அதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாமையால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என சம்பந்தன் மற்றும் சுமந்திரனும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், வட கிழக்கு இணைப்பிற்கு தான் எதிரானவரல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வட கிழக்கை இணைக்க முடியாது என்ற நொண்டிச்சாட்டைக் கூறி, இப்பொழுது அது சாத்தியமில்லை என்ற பிரசாரத்தை மேற்கொள்வதற்கு சுமந்திரனுக்கு அனுமதியளித்தது யார்..? தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெளிவிவகார செயலாளராகவோ வெளிவிவகார பொறுப்பாளராகவோ சுமந்திரன் கூட்டமைப்பால் ஒரு காலத்திலும் நியமிக்கப்படவில்லை.

கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களைக் கவனிப்பதற்கு ஒரு குழுவை நியமிக்கும்படி தாம் கேட்டபோதும் நியமிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த சில நாட்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மத்தியில் கருத்து முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: