சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 05 வருடங்களுக்குள் நாட்டின் சகல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, பல்கலைக்கழகங்கள் மீது இது குறித்த பரந்த பொறுப்பு சார்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் AI தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பல்கலைக்கழக கல்வியலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கு, இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
2035 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்படும் புதிய பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு AI இன் வகிபாகம் முதன்மையாக இருக்க வேண்டுமென் என்பதோடு, நவீன தொழில்நுட்பத்தில் தெற்காசியாவின் அடையாளமாக இலங்கையை மாற்றுவதற்கான இயலுமை காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் பரவியுள்ளது. தெற்காசியாவில் ஒரு தனித்துவமான அடையாளத்தை நாம் பதிப்பதற்கு அந்த தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கும் இது பயனளிக்கும். செயற்கை நுண்ணறிவுக்கும் பௌத்த தர்மத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்வது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|