சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, December 17th, 2022

எதிர்வரும் மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பைப் பேணுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் வசதிகளை குறைக்காமல் செயற்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பொதுவான கவலையாக வருமானம் ஈட்டுதல், வேலை இழப்பு, முதலீடுகளுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாமை மற்றும் முதலீடுகளில் ஆர்வம் இல்லாமை, நிர்மாணத்துறையின் அபிவிருத்தியில் தேக்கம், நிதி மற்றும் பொருளாதார பின்னடைவு போன்றன இருந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக உள்ளூராட்சி அமைப்புகளையும் ஒட்டுமொத்த நாட்டையும் அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

நிதி முதலீடுகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், இதன் விளைவாக பல நிறுவனங்கள் வருமானம் ஈட்டும் வழிகளை இழந்துவிட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சில கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், ஜனாதிபதியினால் இது தொடர்பான பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களில் தமது பணிகளை முன்னெடுப்பதில் உள்ள தடைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் பிரதமர் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: