சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இன்றுமுதல் புதிய வரி விதிப்பு அறிமுகம் – 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பு!

Saturday, October 1st, 2022

சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்றுமுதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான வரிகள் அரசாங்கத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு தற்காலிகமாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி, 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், அதன் அமுலாக்கம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் கீழ் 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருடாந்த புரள்வு மீது 2.5 வீதம் வரி அறவிடப்படும்.

இருப்பினும், மருந்துகள், பெட்ரோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உள்ளூர் உற்பத்தியாளர் அல்லது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட புதிய பால், மூல இலைகள், இலவங்கப்பட்டை அல்லது உள்ளூர் உற்பத்தியாளர் அல்லது உற்பத்தியாளரிடமிருந்து பெறப்பட்ட றப்பர் உள்ளிட்ட சில பொருட்களுக்கு சமூக பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர் மின்சார உற்பத்தி அல்லது மாற்று மின்சார தயாரிப்பு, மருத்துவ சேவைகள், நீர் வழங்கல், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து, தையல் சேவைகள், பயண சேவைகள், ஆயுள் காப்பீட்டு வணிகங்கள், திரையரங்குகள் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்தும் சேவைகள் உட்பட பல சேவைகளுக்கு இந்த புதிய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: