சட்டவிரோத செயல்கள் பாரிய அளவில் இடம்பெறுமாயின் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் சீருடை அணிவதில் வெட்கப்பட வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர் காட்டம்!

Wednesday, July 1st, 2020

போதைப் பொருள் வியாபாரம், கப்பம் பெறல், பாதாள உலக செயற்பாடு, மரம் வெட்டுதல், விபச்சார விடுதி, மணல் அகழ்வு உட்பட ஏனைய சட்டவிரோத குற்றச் செயல்கள் பாரிய அளவில் இடம்பெறுமாயின் அது அந்தந்த மாகாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் தாம் சீருடை அணிவதில் வெட்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தாம் சேவையாற்றும் பிரதேசத்தில் காணப்படும் எந்தவொரு அழுத்தங்களுக்கு அடிப்பணியாது, தமது சீருடையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் சட்டவிரோத செயற்பாடுகள் பாரிய அளவில் இடம்பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம்.

இங்கு இடம்பெறும் தவறுகளினால் அந்தந்த மாகாணங்களில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடக்கம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வரையான சகல பொலிஸ் அதிகாரிகளும் பொறுப்புக் கூறலிலிருந்து நழுவ முடியாது மாறாக குறித்த மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான பொறுப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தமது கடமைகளை ஏனைய தொழில் போல கணக்கெடுக்க வேண்டாம். இந்த நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை மற்றும் தரம் உங்களின் கரங்களிலேயே உள்ளது. நாட்டில் பாரிய அனர்த்தங்கள், பயங்கரவாதிகள் அல்லது எதிரிகளின் அச்சுறுத்தல்கள், இயற்கை அனர்த்தங்களான வெள்ளப் பெருக்கு, மண்சரிவு அபாயம் மற்றும் கொவிட் போன்ற அசாதாரண நிலைமைகளின் போது முன்வந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு நாட்டிலுள்ள இராணுவத்திற்கு உள்ளது.

நீங்கள் தான் நாட்டு மக்களின் மனோ நிலமையை உணர்ந்து அவர்களது வாழ்க்கை தொடர்பில் பொறுப்பு கூறக்கூடியவர்கள். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் விசாலமானது என்றார். அதிகமான பொலிஸ் அதிகாரிகள் மிகவும் கௌரவமான முறையில் சேவையாற்றுபவர்கள் என்பது தெரியும் அவற்றை நாங்கள் பாராட்டுகின்றோம். என்றாலும் சில பொலிஸ் அதிகாரிகள் அகொளரவமான முறையில் நடக்கின்றமை கவலைக்குறிய விடயமாகும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அதிகமான பொலிஸ் பிரிவுகளில் மக்களுக்கான சேவைகள் சரிவர நிறைவேற்றப்படுவதில்லை பொலிஸார் பொறுப்பற்ற விதத்திலும் பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுப்படும் நபர்களுடன் தொடர்புகளை பேணிவருது தொடர்பிலும் தனக்கு கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: