சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு மக்களை அனுப்பும் முகவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!

Saturday, November 19th, 2022

சுற்றுலா விசா மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு மக்களை அனுப்பும் முகவர்கள் தொடர்பில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சுற்றுலா விசா மூலம் பெண்களை ஓமானுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை விற்பனை செய்துள்ளதாக வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விசேட அறிவித்தலை விடுத்து விடயங்களை தெரிவித்த அமைச்சர், அது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், ஆட்கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பன வேறு வேறானவை. சுற்றுலா விசாவினால் திருட்டுத்தனமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு செல்வார்களானால் அது வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையுடன் தொடர்புடைய விடயமல்ல. அரசாங்கம் என்ற வகையில் அது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்ககப்பட்டுள்ளன.

துபாய் ஊடாக ஓமானுக்கு பெண்களை அழைத்துச் சென்று அங்கு அவர்களை விற்பனை செய்து பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் தரகர்கள் சிலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து விசேட குழுவொன்றை அமைத்து இலங்கைக்குள்ளும் விமான நிலையத்திலும் அதனுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்துவது அவசியமாகிறது.எவ்வாறாயினும் அரசாங்கம் என்ற வகையில் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விமான நிலைய அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் இணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையைஅதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: