சகல தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைத்தால் மாத்திரமே ஏப்ரல் 25 இல் தேர்தலை நடத்த முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, March 13th, 2023

தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டு அட்டைகளை எதிர்வரும் புதன்கிழமை (15) ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாக அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் தாமதமாகும் என அவர் இதுவரை வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்  நடவடிக்கைகளுக்கு நிதி விடுப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவுக்கமைய, திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டும்.

சகல தரப்பினரது ஒத்துழைப்பு கிடைத்தால் மாத்திரமே ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை திறைசேரி விடுவிப்பதை இடைநிறுத்தியுள்ளமைக்கு எதிராக உயர்  நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை அடிப்படையாக கொண்டு கடந்த 7ஆம் திகதி அரச அச்சக திணைக்கள தலைவர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தும் திறைசேரியின் செயலாளர் கலந்துகொள்ளவில்லை.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து அரச அச்சக திணைக்கள தலைவர் கங்கானி லியனகே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களை 5 நாட்களுக்குள்ளும், பொது வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டை 20 நாட்களுக்குள்ளும் வழங்க முடியும் என குறிப்பிட்டார்.

நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளதால் அரச அச்சக திணைக்களம் திறைசேரியிடமிருந்து நேரடியாக நிதி பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டோம்.

இவ்வாறான பின்னணியில் தபால்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டது. நிதி வழங்கல் தாமதமானால், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்களை ஒப்படைப்பது தாமதமாகலாம் என அரச அச்சக திணைக்களத் தலைவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இடைக்கால தடையுத்தரவை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை இடைநிறுத்த பாராளுமன்ற சிறப்புரிமை குழு அறிவிக்க வேண்டும் என அரசாங்க தரப்பினர் பாராளுமன்றத்தில் விசேட கூற்றுக்களை முன்வைத்துள்ளதை அவதானித்துள்ளோம்.

இந்த கருத்துக்களினால் சட்டவாக்கம் மற்றும் நீதித்துறைக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம்.

சகல தரப்பினரது ஒத்துழைப்புக்கள் இருந்தால் மாத்திரமே எதிர்வரும் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும்.

நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு.  திட்டமிட்ட வகையில் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: