கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணை விவகாரத்திற்கு அமைச்சர் டக்ளஸ் முற்றுப்புள்ளி!

Tuesday, August 10th, 2021

பூநகரி, கௌதாரிமுனை கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிகளை வழங்கி வைத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் இலங்கை – சீனக் கூட்டு நிறுவனத்தினால் பரீட்சார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தினை சட்ட ரீதியாக கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்கள் ஆகியோர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்குறிப்பிட்ட அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.

பூநகரி நக்டா நிறுவன வளாகத்தில் இன்று(10.08.2021) நடைபெற்ற குறித்த ஒன்று கூடலில் சம்பிரதாயபூர்வமாக ஏழு பேருக்கு அனுமதிப் பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கௌதாரிமுனைப் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கான குறித்த பிரதேசத்தைச் சேர்ந்து சுமார் 52 கடற்றொழிலாளர்கள் இதுவரை விண்ணப்பித்திருந்தனர்.

அதனடிப்படையில், பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி வழங்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக, பண்ணை அமைப்பதற்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பண்ணைகளை அமைப்பதற்கான ஆரம்ப முதலீடுகளை வழங்குவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவரும் கடற்றொழில் அமைச்சரினால் ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளது.

இந்நிலையில், உடனடியாக களத்தில் இறங்கி வேலைகளை ஆரம்பிக்குமாறு பயனாளர்கள் மற்றும் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, இலங்கை – சீன கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சார்த்த கடலட்டைக் குஞ்சு பராமரிப்பு நிலையத்தின் முதலீடும் தொழில்நுட்பமும் எமக்கு அவசியமாக இருப்பதனால் குறித்த கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையத்தினை கெளதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்திடம் ஒப்படைப்பதற்கு தீர்மானக்கப்பட்டள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அறிவுத்துள்ளார்.

இதன்மூலம் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட கௌதாரிமுனை கடலட்டை பண்ணை விவகாரத்திற்கு கடற்றொழில் அமைச்சரினால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு்ள்ளது.

கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சார்த்த கடலட்டைப் பராமரிப்பு நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் மக்களை குழப்பும் வகையிலான கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தது. இதனால் மக்களின் உண்மையான விருப்பங்களை அறிந்து கொள்வதற்காக இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளாமை ஏமாற்றமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய கலந்துரையாடலில், பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன், நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாணத்திற்கான பணிப்பாளர் நிருபராஜ், கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதானி மோகனகுமார், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் .தவநாதன், ஈ.பி.டி.பி. கட்சியின் பூநகரி அமைப்பாளர் இராசலிங்கம் மற்றும் தனியார் முதலீட்டாளர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: