கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கட்சி பேதங்கள் பார்க்கப்படமாட்டாது – ஜனாதிபதி!

Wednesday, November 23rd, 2016

தொழிற்சங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கட்சி பேதங்கள் பார்க்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையில் நேற்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் தொழிற்சங்கப் பிரிதிநிதிகளுக்குமிடையே நேற்று(21) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

முன்னர் ஜனாதிபதிக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்புக்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் வேண்டுகோளின் பேரிலேயே நடைபெறுவதுண்டு. இம்முறை இந்தக் கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு முதன் முறையாக ஜனாதிபதி அழைப்பு விடுக்கப்பட்டது இதுவேயாகும்.

ஊழியர் பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைகள், சம்பளம் தொடர்பான பிரச்சிகைள் மற்றும் ஊழியர்களுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜனாபதிபதிக்கு விளக்கினர்.

நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிய பங்களிப்பைச் செய்கின்றவர்கள் என்றவகையில் அப்பிரதிநிதிகள் தமது தொழில்ரீதியான பிரச்சினைக்கு கலந்துரையாடல் மூலமாக தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகக் தெரிவித்த ஜனாதிபதி, விரைவில் அமைச்சில் ஆறு உபகுழுக்களை நியமித்து பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இதனைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் ஒருவரையும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரையும் தமக்குக்கீழுள்ள தேசிய ஒருங்கிணைப்பு, இன நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளரையும் கொண்ட ஒரு பிரதான குழுவை நியமிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு ஊழியர்களின் திருப்தியும் மகிழ்ச்சியுடன் கடமையை மேற்கொள்வதற்குத் தேவையான சூழலும் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பட்ட ஜனாதிபதி, கட்சி பேதங்களின்றி நிறைவேற்ற முடியுமான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை எடுப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சுக்களின் கீழ் உள்ள பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் முன்பிருந்த அரசாங்கங்கள் எந்தவொரு தீர்வையும் வழங்கவில்லை என்பதால் அது தொடர்பாக ஒரு உடனடித் தீர்வைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி கூறினார்.

இதனைத் தொடர்ந்து மகாவலி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அவர்களுக்குமிடையே கலந்துரையாடல் நடைபெற்றதுடன் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அநுர திசாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

09-e1436888118374-1024x648

Related posts: