கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.- பாணின் விலையை அதிகரிப்பதற்கான திட’டத்தை நிறுத்துங்கள் – வெதுப்பக வர்த்தகர்களிடம் வர்த்தக அமைச்சு கோரிக்கை!

Sunday, September 11th, 2022

துருக்கி மற்றும் துபாயில் இருந்து கடன் அடிப்படையில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பாண் மற்றும் கோதுமை மா சார்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான திட்டத்தை நிறுத்துமாறு வெதுப்பக வர்த்தகர்களிடம் வர்த்தக அமைச்சு கோரிக்கைவிடுத்துள்ளது.

உள்நாட்டுத் தேவைகள் காரணமாக ஏற்றுமதி செய்வதில்லை என்ற முடிவைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா வெள்ளிக்கிழமை முதல் அரிசி ஏற்றுமதிக்கும் 20 சதவீத வரி விதித்துள்ளது.

இந்தநிலையில் கோதுமை மா இறக்குமதிக்கான கடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு விலை அதிகரிப்பை  நிறுத்துமாறு வெதுப்பக உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டையில் உள்ள சிறிய இறக்குமதியாளர்களிடமும் டிசம்பர் மாதம் வரை கோதுமை மாவை இறக்குமதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அதற்காக கடன் வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கோதுமை மா இறக்குமதியில் 80 வீத பங்குகளை கொண்டுள்ள இரண்டு பெரிய நிறுவனங்களுக்கும் இதே போன்ற வசதிகள் செய்து தரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பாண் மற்றும் மா அடிப்படையிலான பொருட்களை அதிகரிக்க வெதுப்பக உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

000

Related posts: