கொவிட் 19 நோயாளர்களை அடையாளம் காண பீ.சீ.ஆர். முறைமையே சிறந்தது – அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, November 26th, 2020

கொவிட் 19 நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு உசிதமான பரிசோதனை பீ.சீ.ஆர். முறைமையே என்று அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரெபிட் எண்டிஜென் என்ற பிறப்பொருள் எதிரி பரிசோதனை முறைமை, பீ.சீ.ஆர். பரிசோதனைக்கு மாற்றீடாக அமையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பீ.சீ.ஆர்.பரிசோதனை மூலம் ஒரு நோயாளிக்கு 14 நாட்களுக்குப் பின்னரும் கொரோனா வைரஸ் இருந்ததா என்பதை அடையாளம் காண முடியும்.

ஆனால் என்டிஜென் சோதனை மூலம் மிக அதிகமான கொரோனா வைரஸ் இருந்தால் மாத்திரமே, கொவிட் தொற்றுறுதி ஆகி இருப்பதாக வெளிக்காட்டும்.

எதிர்ப்புடல் ஏற்பட்டதன் பின்னர் வைரஸ் இருப்பதை என்டிஜென் பரிசோதனை மூலம் கண்டறிய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், என்டிஜென் பரிசோதனையின் மூலம் கொவிட் தொற்று இல்லை என்று ஒருவருக்கு உறுதி செய்யப்படுகின்ற போதும், அவர் கொவிட் நோயால் பாதிக்கப்படவில்லை என்று முழமையாக நம்பமுடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் லால் பனாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

என்டிஜென் பரிசோதனை மூலம் ஒருவருக்கு நோய்த்தொற்று இருக்கிறது என்று கண்டறியப்பட்டால் அதனை நம்பமுடியும்.

எனினும் நோய் இல்லை என்று வந்தால், அவருக்கு மீண்டும் பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலைமை இருக்கிறது.

எனவே தனியார் துறையினருக்கு இந்த பரிசோதனையை நடத்தும் அனுமதி இப்போதைக்கு வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: