கொள்ளுப்பிட்டி அனர்த்தம் – பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை!

Saturday, October 7th, 2023

கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் குறித்த பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரினதும் மன அழுத்தத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இருவரையும் நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையின் தலைமையகத்திற்கு அழைத்து, அதன் தலைவர் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இதேவேளை, குறித்த விபத்தில் சிக்கி ஐவர் உயிரிழந்ததுடன்  5 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவுறுத்தியுள்லதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு நகரில் உள்ள மரங்களின் உறுதித்தன்மை தொடர்பில் விசேட குழுவொன்று அடுத்த வாரம் ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: