கொரோனா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது – ஜப்பான் விஞ்ஞானிகள்!

Friday, April 3rd, 2020

கொரோனா வைரஸ் இரண்டு வழிகளில் பரவும் என்றே இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது வழியிலும் பரவும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய தகவல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடும் என கருதப்படுகிறது.

மேலும், உலக நாடுகள் இதுவரை எடுத்து வந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மேலும் கடுமையை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை வேகமாக பரவி, பெரும் பாதிப்பை உண்டாக்கி உள்ளது.

கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் தான் அதிகம் பரவுகிறது. கொரோனா வைரஸ் பாதித்த மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்கள், அவர்கள் தங்கி இருக்கும் இடம் அல்லது அவர்களின் தும்மல், இருமல் மூலம் வெளிப்படும் துளிகள் மூலம் தான் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதாக கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஜப்பான் விஞ்ஞானிகள் நுண் துளிகள் மூலம் கொரோனா வைரஸ் குறிப்பிட்ட அளவு தூரத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், பேசிக் கொண்டு இருக்கும் போதும், அருகே இருக்கும் போதும், தும்மல், இருமல் இல்லாமலேயே, நுண் துளிகள் மூலம் இந்த வைரஸ் மனிதர்கள் இடையே பரவக் கூடும்.

இது தும்மல், இருமல் மூலம் வெளியாகும் துளிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. மேலும், இந்த நுண் துளிகள் மூலம் தான் கொரோனா வைரஸ் வேகமாகவும், அதிக தீவிரத்துடன் பரவி இருக்க வேண்டும் என நம்மால் எளிதாக உணர முடிகிறது.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் தும்மல், இருமல் துளிகள் மூலம் பரவுவதை மருத்துவ முகக் கவசம் அல்லது N95 முகக் கவசம் மூலம் தடுத்து நிறுத்த முடியாது என சில நிபுணர்கள் கூறி வரும் நிலையில், நுண் துளிகள் மூலம் பரவினால் அதை தடுப்பது இன்னும் கடினம் ஆகும்.

இந்த நுண் துளிகள் பற்றி செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒரு வகுப்பறையில் ஒரு மனிதர் இருமினால் சில நொடிகளில் ஒரு லட்சம் நுண் துளிகள் வரை பரவும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், காற்று மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் குறைவு. ஆனால், நுண் துளிகள் காற்றில் நீண்ட நேரம் இருக்கும். அதனால், அந்த இடத்தில் இருக்கும் பலருக்கும் அது பரவ வாய்ப்பும் அதிகம்.

இந்த புதிய ஆய்வுத் தகவல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கப் போகிறது என்பது நல்ல செய்தி.

அதே சமயம், இந்த மூன்றாவது வழி மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்றால் உலக நாடுகள் ஊரடங்கு விதிகளை மேலும் கடுமையாக்கவும், அதிக நாட்கள் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது.

Related posts: