கொரோனா வைரஸ்: இதுவரை 3117 பலி – 90,922 பேர் பாதிப்பு!

Tuesday, March 3rd, 2020

கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. இதில் சீனாவில் மட்டும் 2,944 பேர் இறந்துள்ளதாக இந்நாட்டு தேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா உள்பட 70 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

சீனாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் இறந்து வந்த நிலையில், தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் சிறிது குறைந்துள்ளது. அதேநேரம், உலகளவில் 90,922 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 80,151 பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

தென்கொரியாவில் 4,812 பேர் பாதிப்பு

உலகின் 12 வது மிகப்பெரிய பொருளாதார நாடான தென் கொரியாவில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதுவரை 28 பேர் இங்கு வைரஸ் பாதிப்பினால் பலியான நிலையில், நேற்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 476 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு அடுத்தப்படியாக வைரஸ் தாக்குதலினால் அதிகளவு பாதிப்புக்குள்ளான நாடுகளில் தென் கொரியா உள்ளது. நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 4,812 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 90 சதவீதம் பேர் டேகு நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் 6 பேர் பலி

அமெரிக்காவின் சியாட்டில் நகர சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், `வெள்ளிக்கிழமையன்று வாஷிங்டனில் உள்ள கிர்க்லேண்டை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை சியாட்டில் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் கிர்க்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வாஷிங்டனில் 12 பேருக்கு புதிதாக வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Related posts: