கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!

Friday, January 28th, 2022

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் மரணம் என்பன குறையும் என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நபர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுமாயின், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால், அவர்களால் சூழலுக்கு விடுவிக்கப்படும் வைரஸின் அளவு குறைவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

20 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசி பெற்று 3 மாதங்கள் பூர்த்தியானதன் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன், 16 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியை பெற்று இரண்டு வாரங்கள் பூர்த்தியானதன் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளமுடியும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது நாட்டில் ஒமைக்ரொன் புதிய கொவிட் வைரஸ் திரிபுடன் அதிகளவானோர் பல நாடுகளில் அடையாளம் காணப்படுகின்ற போதிலும், நம் நாட்டில் அவ்வாறானதொரு ஆபத்தான நிலை இல்லையனெ உறுதியாகக் கூறமுடியாது என்றும் அவ்வாறான பாரதூரமான நிலைமைகள் ஏற்படாதிருக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு இரண்டாம் கொவிட் தடுப்பூசியை செலுத்தும் பணிகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் வரும் நாட்களில் எடுக்கப்படும் என சிறுவர் நோய் விசேட வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மேற்படி வயதுப் பிரிவில், சுமார் 4 இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டன. எனவே, தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க, பெற்றோர்கள் ஆர்வத்துடன் செயற்பட வேண்டும் என சிறுவர் நோய் விசேட வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: