கொரோனா இறப்பு விபரங்களை மறைக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021

சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைக்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், எது நடந்தாலும் பரவாயில்லை. நாட்டை மூட மாட்டோம் என்ற இறுக்கமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண .அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொவிட் வைரசு தொற்றுக்குள்ளாகுவோர் மற்றும் மரணங்கள் குறித்த தரவுகளில் தவறுகள் இருப்பதாக குறை கூறப்படுகிறது. தவறு இருக்குமாயின் அது சரி செய்யப்படும். இவற்றை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில்; அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்..

உலக நாடுகள் கொவிட் கட்டுப்படுத்தலுக்காக மூன்று பிரதான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. அவற்றில் முதலாவது முழுமையான முடக்கம் . சில நாடுகள் மொத்த சனத்தொகையில் 40 – 50 சதவீதம் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியை வழங்கியதன் பின்னர் முடக்கத்தை நீக்குகின்றன.

சில நாடுகள் குறிப்பிட்ட சனத்தொகைக்கு தடுப்பூசி வழங்குவதோடு, நாட்டில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன. நாம் தற்போது மூன்றாவது முறைமையையே பின்பற்றுகின்றோம் என்று குறிப்பிட்ட அமைச்சர், கொவிட் வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டை முடக்குவதா என்ற விடத்தில் சுகாதார அமைச்சு இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

அத்துடன் என்ன நடந்தாலும் நாம் நாட்டை முடக்கப்போவதில்லை என்ற இருமாப்பில் அரசாங்கம் செயல்படவில்லை. இது தொடர்பில் சுகாதார அமைச்சு பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேநேரம் நாட்டில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூற விலலை. ஜனாதிபதியும் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

இதனிடையே நாட்டில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் 02 மில்லியன் பேர் உள்ளனர். இவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஆனால் தொழில் எதுவுமற்ற வருமானமின்றி எட்டு மில்லியன் பேர் உள்ளனர். இவர்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி செயல்படுகின்றது.

இந்த மக்கள் குறித்து கவனம் செலுத்தியே மூன்றாவது தீர்வை செயல்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் மாற்றம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றால் அது குறித்து சுகாதார அமைச்சு அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: