கொரோனா அச்சுறுத்தல் : இலங்கையில் இதுவரை 50 பேர் பூரண சுகம் – 133 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் – சுகாதார அமைச்சு! எக் காரணத்திற்காகவும் எவருக்கும் இடமளிக்கப்படாது : இதுவே இறுதி முடிவு – பாதுகாப்பு பிரிவு!

Friday, April 10th, 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் மிக்க வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்ல எந்த ஒரு காரணத்திற்காகவும் எவருக்கும் இடமளிக்கப்படாது என பாதுகாப்பு பிரிவு மீண்டும் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –

இன்றுமுதல்  எதிர்வரும் ஒரு வாரக்காலப்பகுதியானது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டிய காலம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி எதிர்வரும் சில நாட்களில் ஏனைய தேவைகளுக்காக வீதிகளில் பயணிக்க கூடாது எனவும் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவ்வாறனவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்றும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 இலிருந்து 50 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, புதிதாக கொரோனா தொற்றிய எவரும் இன்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த அமைச்சு ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 190 பேரில் தற்போது 133 நோயாளிகள் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளதுடன் மேலும் 242 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது;

இதனிடையே – அக்கரைப்பற்று – 19 வது பிரிவு முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுறுதியான ஒருவர் அங்கு அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த பகுதியில் சுமார் 320 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அக்கரைப்பற்று 19 வது பிரிவுக்கு செல்லும் 5 வீதிகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை பேருவளை – மருதானை – வெத்திமராஜபுர பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண் ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்டார். அவர் இதற்கு முன்னர் இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த ஒருவரின் மனைவி என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவர்களின் வீட்டிலிருந்த 20 பேர் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்..

இதேவேளை, ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி எதிர்வரும் சில நாட்களில் ஏனைய தேவைகளுக்காக வீதிகளில் பயணிக்க கூடாது என பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவ்வாறனவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை இந்த மாத இறுதியில் நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டாக இருக்கும் என சுகாதார மற்றும் மருத்து புள்ளிவிபரவியல் சர்வதேச நிபுணர் மருத்துவர் ரவீந்திர ரன்னன்எலிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் அளவு குறைவாக காணப்படுவதனால் இறுதியான எண்ணிக்கையை கணிக்க முடியாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுபடுத்த ஒரு வருடத்திற்கும் அதிகமான காலங்கள் தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இவ்வாறிருக்க கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிவதற்கான 20064 மருத்துவ கருவிகள் சீன விமானம் மூலம் இன்றிரவு இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மேலும் 20 ஆயிரம் மருத்துவ உபகரணங்கள் அடுத்த வாரமளவில் இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: