கொரோனாவுக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கை வெற்றிகண்டுள்ளோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கினை வெற்றி கொள்வதற்கு எமக்கு முடிந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல சுஹுருபாய அமைச்சக கேட்போர் கூடத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் வேலைத்திட்டத்தை சமர்ப்பிக்கும் நிகழ்வில் உரலயாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2022 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறைக்கு ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் நான்கு இராஜாங்க அமைச்சுக்கள் செயற்படுவதுடன், நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியன அதில் அடங்குகின்றன.

இதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவினால் 2021 ஆம் ஆண்டின் அமைச்சின் முன்னேற்றம் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைத் திட்டம் ஆகியன முன்வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு இராஜாங்க அமைச்சுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள் 2022ஆம் ஆண்டிற்கான உத்தேச வேலைத்திட்டத்தை பிரதமர் முன்னிலையில் முன்வைத்தனர்.

பிரதமரின் ஆலோசனைக்கமைய கிராமிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 20 ஆயிரம் வீடுகளுள் 15 ஆயிரம் வீடுகளில் இதுவரை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை குடியேற்றியுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி அபேவர்தன இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நிர்மாணத்துறைக்கு அவசியமான மூலப்பொருட்களை நாடளாவிய ரீதியில் இயங்கும் 18 கிளைகளின் ஊடாக நியாயமான விலைக்கு நுகர்வோருக்கு பெற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

அத்துடன் நூறு நகர அபிவிருத்தி திட்டத்தின் பணிகள் இதுவரை 70 சதவீதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும், புதிய வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மேலும் 118 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் ஒருபோதும் அபிவிருத்தி செய்யப்படாத நகரங்கள் மற்றும் கிராமப்புற அபிவிருத்திக்காக விசேட அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனிடையே 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் மற்றும் இந்திய – இலங்கை நட்புறவு வேலைத்திட்டம் ஆகியவற்றின் கீழ் 900 புதிய வீடுகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி குறிப்பிட்டார்..

இந்நிலையில் இலக்கினை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அமைச்சின் சகல அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: