குடிநீர் வழங்கலை ஒரு சில மாதங்களுக்கு அனர்த்தகால நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை!

Tuesday, April 28th, 2020

யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு சபையால் வழங்கப்படும் குடிநீரை விநியோகிக்கப்படும் நேரத்திலிருந்து சற்று நேரத்தை அதிகரித்து பாவனையாளர்களுக்கு வழங்குவதுடன் வழங்கப்படும் குடிநீரை அனர்த்தகால நிவாரணமாக ஒரு சில மாதங்களுக்கு இலவசமாகவும் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளரும் கட்சியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான றீகன் (இளங்கோ) வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது தற்போதைய இக்கட்டான நிலைமையில் யாழ் மாநகர சபை முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்

மேலும் அவர் கூறுகையில் –

தற்போது இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு சட்ட நடைமுறை இருந்துவருகின்றது. இக்காலப் பகுதியில் மக்கள் தத்தமது தேவைகளை கடந்த காலங்களை போன்று உடனடியாக மேற்காள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

அத்துடன் இந்த இக்கட்டான காலப்பகுதியில் மாநகரசபை உறுப்பினர்களாகிய நாம் மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் சுகாதார தேவைப்பாடுகளையும் இலகுவான முறையில் பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்தவகையில் யாழ் மாநகரசபையால் மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீரை ஒரு சில மாதங்களுக்கு இடர்கால நிவாராணமாக இலவசமாக வழங்குவதனூடாக மக்களது வாழ்வாதார சுமையை ஓரளவேனும் குறைக்க முடியும் என்பதுடன் நாம் அவர்களுக்கு வழங்கும் பேருதவியாகவும் இருக்கும்.

எனவே குறித்த ஒருசில மாதங்களுக்காவது எமது சபையால் வழங்கப்படும் குடிநீருக்காக அறவிடப்படும் கட்டணங்களை மக்களிடமிருந்து அறவிடாது இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளர்.

அத்துடன் யாழ் மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் குடிமனைகள் மற்றும் கட்டடங்களுக்கு கிருமித் தொற்று நீக்கி மருந்துகள் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: