குடிநீர் கட்டண அதிகரிப்பை ஏற்கமுடியாது : ஆதரித்தவர்களே பரிகாரம் வழங்கவேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்து!

Tuesday, May 7th, 2019

மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாகவே எமது மாநகரின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அமைய வேண்டும். அதனால்தான் குடிநீர் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட மக்கள் நலன்களை முன்னிறுத்தாத யாழ் மாநகரின் இவ்வாண்டுக்கான பாதீட்டை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எதிர்த்திருந்தது. ஆனால் இந்த மாநகரசபையின் ஏனைய தரப்பினர் மாநகர மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் சரி என்ற நிலைப்பாட்டிலிருந்து குடிநீருக்கான கட்டணத்தை அதிகரித்தமையானது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாநகர சபையினால் அதிகரிக்கப்பட்ட குடிநீர் கட்டணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்று குடிநீர் பிரச்சினை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஒருபக்கம் வறட்சி மறுபக்கம் கட்டண அதிகரிப்பு இதை வறிய மக்களால் எவ்வகையிலும் ஈடுகொடுக்க முடியாது.

மக்களின் நலன்களை முன்னிறுத்தி அபிவிருத்திகளை முன்னெடுப்பதே மாநகரின் பிரதான பணியாக இருக்கும்; நிலையில் எமது மாநகர சபையானது எவ்வகையிலும் அது தொடர்பில் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. நாம் இவ்வாண்டுக்கான பாதீடு சபையில் முன்வைத்தபோதே அது மக்களது நலன்களை முன்னிறுத்தவில்லை என்பதை ஆணித்தனமாக வலியுறுத்தி அதை நிராகரித்திருந்தோம்.

அந்த பாதீட்டில் பாரதூரமான விடயமாக காணப்பட்ட குடிநீர் கட்டண உயர்வை அன்று எமது கட்சி கடுமையாக எதிர்த்திருந்தது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் அதை ஆதரித்து நிறைவேற்றியிருந்தனர்.

ஆனால் வறிய மக்களே அதிகளவு குடிநீரை பெற்றுக்கொள்கின்றனர் என்பதையும்; அந்த மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவதுடன் யாழ். மாநகரின் குடிநீர் கட்டண அதிகரிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்க அந்த தீர்மானத்தை  ஆதரித்தவர்களே பரிகாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related posts: