குடாநாட்டில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

Friday, January 25th, 2019

யாழ் குடாநாட்டில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக சடுதியாக அதிகரித்து வருகிறது.

ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தின் நிறைவில் 701 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 499 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 200 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இலங்கை முழுவதும் 3 ஆயிரத்து 708 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகமாகக் காணப்படுகின்றது. அங்கு 884 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அடுத்த இடத்தில் யாழ்ப்பாணம் உள்ளது.

வடக்கின் ஏனைய மாவட்டங்களைப் பொறுத்த வரையில் கிளிநொச்சியில் 14 டெங்கு நோயாளர்களும் மன்னாரில் 23 நோயாளர்களும் வவுனியாவில் 13 டெங்கு நோயாளர்களும் முல்லைத்தீவில் 3 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையிலேயே டெங்கு நோயின் பாதிப்புக் குறைந்த முதல் மூன்று மாவட்டங்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகியனவே காணப்படுகின்றன.

காய்ச்சல் 3 நாள்களாகத் தொடர்ந்தால் தாமதமின்றி மருத்துவமனையை நாடுமாறும் உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: