கிழக்கு மாகாண மக்களது நலன்களை விட்டுக்கொடுக்காது அக்கறையுடனேயே நாம் செயற்பட்டுவருகின்றோம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Thursday, December 29th, 2016

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அக்கறையுடனேயே செயற்பட்டு வருகின்றதென ஈழமக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சத்திப்பின் போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஆயுதப் போராட்ட காலம்தொட்டு, இன்று வரை எமது கட்சியின் செயற்பாடுகளுக்கு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் பங்களிப்பு இன்றியமையாததாக அமைந்திருந்ததாகவும், கடந்த சில வருடங்களாக எமது கட்சியின் செயற்பாடு மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் சில பின்னடைவுகளைச் சந்தித்திருந்தாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக கட்சியின் செயற்பாடுகளை புதுப் பொலிவுடன் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

image-0-02-06-c89f6249330da690b91aa95b21134897079173bbbd0ec4c4e3e9bec628392f7b-V

குறிப்பாக, கட்சியின் முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய குழுவினர் இம்மாவட்ட மக்களை அவர்களது பகுதிகளுக்குச் சென்று சந்தித்து மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான பல சந்திப்புக்களை எமது கட்சியின் பிரதிநிதிகள் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, அரசியல் தீர்வு விடயத்திலும் மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த மக்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டு, செயலாளர் நாயகத்தின் ஊடாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ள பசுபதி சீவரத்தினம், எமக்கான அரசியல் பலத்தை மக்கள் வழங்கும் பட்சத்தில், தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் பெற்றுக் கொடுக்க எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

02

தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தாமே கொண்டு வந்ததாகக் கூறிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதிருக்கின்றனர். தேர்தல் காலங்களில் மட்டும் எமது மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, நாடாளுமன்றத்திற்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதன்பின்னர் எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் எந்தவித முன்னகர்வுகளையும் மேற்கொள்ள விரும்பாதவர்களாக, தமது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே அக்கறை காட்டி வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் எமது மக்களின் நிலங்களை விடுவித்துத் தருவதாகவும், நீண்டகாலமாக சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகவும், காணாமற் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், சமஷ்டி மூலம் எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதிகளை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இவற்றில் ஒன்றையேனும் செயற்படுத்தவில்லை. இந்த அரசாங்கத்தைத் தாமே கொண்டு வந்தோம் எனக் கூறுவதுடன், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் இவர்கள் தமக்குள்ள அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் மூலம் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்ற போதிலும், குறித்த விடயத்தில் சிறிதளவேனும் அக்கறையற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.

01

சமஷ்டி மூலம் தீர்வைப் பெற்றுத் தருவதாக எமது மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இன்று தென்னிலங்கையில் அரசாங்கம் கூறும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயத்திற்கு அரச தரப்பினருடனான சந்திப்பின் போது எதிர்ப்புத் தெரிவிக்காதவர்களாகவும், எமது மக்கள் மத்தியில் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயத்தை எதிர்ப்பதாகவும் காட்டிக் கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களிடம் எதைக் கூறுகின்றாரோ அதையே மத்திய அரசாங்கத்திடமும், மத்திய அரசாங்கத்திடம் எதனைப் பேசுகின்றாரோ அதையே எமது மக்களிடமும் தெரிவித்து வருகின்றார். அத்துடன், எமக்கான அரசியல் பலத்தைக் கொண்டு தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக்கூடிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான முழு முயற்சிகளையும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts:


கொழும்பை அண்மித்த கரையோரங்களில் மருத்துவ கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளது - சமுத்திர சூழல் பாதுகாப்பு...
தனிமைபடுத்தப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும் ஆபத்தில் மாணவர்கள் – சமூக வைத்தியர் அயேஷா லொக்கு பாலசூரிய ...
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை திங்களன்று விடுவிக்க நடவடிக்கை - அத்தியாவசிய பொருட்கள்...