ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது மௌனித்திருந்த அமைச்சர்கள்!

Friday, August 18th, 2017

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் அண்மையில் வெளியான காணொளி குறித்து அமைச்சர்கள் உள்ளிட்ட பொலிஸ் ஊடக பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளால் பதிலளிக்கமுடியாது திணறியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது, குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், ஒரு கட்டத்தில் ஊடகவிலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களான தாயாசிறி ஜயசேகர, ராஜித சேனாரத்தன மற்றும் பொலிஸ் ஊடகபேச்சாளர் ஆகியோர் பதிலளிக்க முடியாது மௌனமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்தனர். அந்தவகையில், “ஒரு விடயத்தை செய்யுமாறு அரசாங்க ஊழியர்களை கட்டாயப்படுத்துவது சரியா?” என கேள்வியெழுப்பியிருந்தனர்.

எனினும், இந்த கேள்விக்கு அமைச்சர்கள் உள்ளிட்ட பொலிஸ் ஊடக பேச்சாளரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து “அமைச்சரிடம் இருந்து பொறுப்பான பதிலை எதிர்பார்ப்பதாக” ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, “இவ்வாறு சுற்றுநிரூபம் வெளியிடுவது தவறு போலவே தோன்றுகின்றது. தியானம் செய்வதற்கு பதிலாக பொலிஸ் அதிகாரிகள் தமது உடல் வலிமையை பேணுவதற்கு ஏதாவது செய்யலாம்” என அமைச்சர் கூறியிருந்தார்.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர், பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் பொலிஸ் தலைமையக லிப்ட் பணியாளர் ஆகியோரை தாக்க முற்படுவது போன்ற காணொளி ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: