கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான் விஜயம் – சுற்றுலா துறை அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஷிம்பேய் மட்ஷிதா உறுதியளிப்பு!

Wednesday, June 21st, 2023

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், ஜப்பான் நாட்டின் மியாசாகி நாடாளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவை சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் நீண்டகால நண்பரான மியாசாகியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான்  நாடாளுமன்றத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஜப்பான் நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான்,  இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் இருதரப்பு சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் குறித்தும்  கலந்துரையாடினார்.

ஜப்பானில் உள்ள மியாசாகி கடற்கரைக்கு வருகைதரும் உலாவர்கள்(sufers) ஊடாக இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உலகத் தரம் வாய்ந்த உலாவல் இடங்களில் (surf  spot) ஒன்றாக அருகம்பே கடற்கரையை ஊக்குவிக்க கடற்கரை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும்  ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது முன்வைத்துள்ளார்.

அத்துடன், அருகம்பே  போன்ற உலாவல் இடங்களில் (surf  spot) சமமான ஆற்றலைக் கொண்ட ஜப்பானின் மியாசாகி கடற்கரையை ஊக்குவிப்பது போல், அருகம்பே கடற்கரையை உள்ளூர் அதிகாரிகளால் சர்வதேச உலாவர்களுக்காக (Surfers) ஊக்குவிக்கப்படும் எனவும் ஷிம்பேய் மட்ஷிதாவிடம் ஆளுநர் கூறினார்.

இதன்போது அருகம்பே கடற்கரையை சர்வதேச உலாவர்களுக்கு (Surfers) ஊக்குவிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஷிம்பேய் மட்ஷிதா ஆளுநரிடம்  உறுதியளித்துள்ளார்.

மேலும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார். அதற்கும் ஷிம்பேய் மட்ஷிதா தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: