கிழக்கு மாகாணததில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பல வேலைத்திட்டங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செய்து காட்டியுள்ளது -புஸ்பராஜா

Tuesday, May 10th, 2016

கிழக்கு மாகாணததில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பல வேலைத்திட்டங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செய்து காட்டியுள்ளது.

குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் 08 மீள்குடியேற்றக் கிராமங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இசை நடனக் கல்லூரி இணைப்பு, அம்பாறை மாவட்டத்தில் காரைதீவுக்கென தனியானதொரு தமிழ் பிரதேச செயலகம் அமைத்துக் கொடுத்தமை என எமது எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா செய்து கொடுத்தவை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட கட்சியின் நிர்வாக செயலாளர் புஸ்பராசா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் பணியைச் செய்து வந்திருக்கின்றோம். இதன் வெளிப்பாடாக 1994ஆம் ஆண்டு உள்ள+ராட்சி மன்றத் தேர்தலில் நகர சபையில் போட்டியிட்டு ஓர் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டோம்.

அதுமட்டுமல்லாமல், திருகோணமலை மாவட்டத்திற்கு எக்கட்சியுமே உரிமைகோர முடியாத அளவிற்கு பாரிய சேவையாக லிங்கநகர், ஆனந்தபுரி, நித்தியபுரி, உதயபுரி, தேவாநகர், வரோதயாநகர், பூம்புகார் கிழக்கு, பாலையூற்று, அலெஸ்தோட்டம், புளியங்குளம் ஆகிய மீள்குடியேற்றக் கிராமங்களை உருவாக்கிகொடுத்துள்ளோம்.

இன்று, குறித்த மீள்குடியேற்றக் கிராமங்களில் எங்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களில் நின்றுகொண்டு தமிழ் அரசியல்வாதிகள் எனக் கூறுபவர்கள் கூட்டத்தை நடத்துவதை மட்டுமே மக்களுக்காக செய்கின்றனர்.

கடந்த 1995ஆம் ஆண்டு கப்பல்துறை என்னும் பிரதேசத்தில் தமிழ் மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவதை செயலாளர் நாயகத்திடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்த போது, அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமிழ் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுவது நிறுத்தப்பட்டன.

ஆனால் இன்று திருகோணமலை மக்களுடைய வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாத பல விடயங்கள் உள்ளன.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசம் என்பது பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பிரதேசம். இன்று அப்பிரதேசம் பெரும்பான்மையினத்தவர்கள் வசமாகி கந்தளாவ எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக இல்லை. அத்துடன் சேருவில என்ற பிரதேசமும் சேருவாவில எனப் பெயர் மாற்றப்பட்டு தமிழ் மக்களின் விகிதாசாரம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இருந்துகொண்டு, 1995ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களுடைய நிலப்பிரதேசங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திய அந்த வல்லமை, இன்று எமது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்குத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக்கூட இல்லை என்பதைத் தெரியப்படுத்துகின்றேன் என்று மேலும்  தெரிவித்துள்ளார்.

Related posts: