கிளிநொச்சி நோய்த்தொற்றினால் பாதிக்கப்படும் கால்நடைகள் – விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, March 6th, 2023

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, கரைச்சி ஆகிய பகுதிகளில் கால் நடைகளுக்கு பரவி வரும் நோய்த்தாக்கம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெரியம்மை வகையிலான நோய்த்தாக்கமே இவ்வாறு கால்நடைகளிடம் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கால்நடை பண்ணையாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம், நீவில் போன்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கால்நடைகளுக்கு இந்த நோய் தொற்று பரவியுள்ளது.

இந்த நோய்த்தாக்கம் காரணமாக, பால் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக பிரதேச கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் கௌரி திலகன’ கூறுகையில் –

ஏற்கனவே நோய்த்தொற்றுக்குள்ளான கால்நடைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கால்நடை பண்ணையாளர்களுக்கும் இது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன

இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதில், கால்நடை பண்ணையாளர்களின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்.

நோய் தொற்று கண்டறியப்பட்டால், உடனடியாக சுகாதார கால்நடை உற்பத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு அறியப்படுத்தி அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான உரிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு கால்நடை பண்ணையாளர்களுக்கு அறியப்படுத்தியுள்ளோம்.

இந்த நோய் தாக்கமானது கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றாது என்ற போதிலும், ஏனைய கால்நடைகளிடத்தில் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி, அவற்றுக்கான சிகிச்சைகளை வழங்குவதன் ஊடாக நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: