கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு அஜிட் நிவாட் கப்ராலிடம் ஈ.பிடி.பி கோரிக்கை!

Monday, March 1st, 2021

2013- 2014ஆம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டு, ஆட்சி மாற்றம் காரணமாகக் கைவிடப்பட்ட கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று, நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளருமான கோ.றுஷாங்கன் இந்தக் கோரிக்கையை அமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்து பேரவை உறுப்பினர்களுடன் உரையாடியபோதே அஜித் கப்ராலிடம் கறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

568 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள கிளிநொச்சி அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குரிய காணியை 2013ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பேசி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்கலைக்கழகத்துக்குப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்மூலம் 1978ஆம் ஆண்டில் பேராசிரியர் துரைராஜா முன்மொழிந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 30 வருட கனவாக இருந்துவந்த பொறியியல் பீடத்தை அமைக்கும் வாய்ப்பு யாழ் பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்ததுடன், 30 வருடங்களுக்கு மேலாக நிரந்தர இடமில்லாமல் சிரமப்பட்டுவந்த விவசாயபீடமும் அறிவியல் நகரில் அமைந்தது.

தற்போது அங்கு புதிதாக தொழில்நுட்பபீடமும் ஆரம்பிக்கப்பட்டு 2500 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.  எனினும், அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகமும், அதனைச் சுற்றியுள்ள பிரதேசமும் இன்னமும் அபிவிருத்திசெய்யப்படாமல் இருந்துவருகிறது.

இதனைக் கருத்தில்கொண்டே, பல்கலைக்கழகத்துக்கும், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் 2014ஆம் ஆண்டு அறிவியல் நகர் பல்கலைக்கழக அபிவிருத்தித் திட்டம் வகுக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்துவதற்கு 2300 மில்லியன் ரூபா நிதியுதவியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றம் காரணமாக இந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

தற்போது மீண்டும் ஜனாதிபதி கோட்டபாயவின் தலைமையில், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அறிவியல்நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவேண்டும் என்று பேரவை உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு மேலதிக இணைப்பாளருமான கோ.றுஷாங்கன் இராஜாங்க அமைச்சர் அஜித் கப்ராலிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: