கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கைகோருங்கள் – அரவிந்த டி சில்வா மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு!

Thursday, December 14th, 2023

இலங்கையின் கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கைகோர்க்குமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அரவிந்த டி சில்வா மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள பின்தங்கிய கிராமங்களில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக விரைவில் அமைக்கப்படவுள்ள குழுவை வழிநடத்துவதற்கு இவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது இலங்கை கிரிக்கெட் சபையிலிருந்து முற்றிலும் சுயாதீனமான இயங்குகின்ற குழுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆண்டு இது 2 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், குறித்த நிதியை பயன்படுத்த வேண்டிய மாகாணங்களாக வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தின் கீழ், இப்பகுதிகளின் கிரிக்கெட் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், கிரிக்கெட் உபகரணங்களை வழங்குதல் மற்றும் பாடசாலைகளில் கிரிக்கெட்டை ஊக்குவித்தல் ஆகிய அம்சங்களைக் கண்காணிக்கும் பொறுப்புகள் இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

அதேபோல, இந்தப் பகுதிகளில் கிரிக்கெட் மைதானங்கள் அமைக்கும் பணியும் இக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

மேலும், பெண்கள் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்துவதுடன், கிரிக்கெட் விளையாட்டை இலங்கை முழுவதும் சம அளவில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற இலட்சியம் தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (09) கோல்ட்ஸ் கிரிக்கட் கழகத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வைபவத்தில், கிரிக்கெட் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அரசியல் தலையீடுகள் இன்றி விளையாட்டு வளர்ச்சியடைய வேண்டும் என குறிப்பாக வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே இலங்கை கிரிக்கெட்டின் (SLC) ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகள் தோல்விகளை சந்தித்ததன் விளைவாக கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சமீபத்தில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டனர்.

ஆசியக் கோப்பையிலும், 2023 உலகக் கோப்பையிலும் தேசிய அணி தோல்விகளைச் சந்தித்ததன் விளைவாக இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: