கிரமங்களைபிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களே மக்களுக்கு தேவை – பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, August 25th, 2020

கிராம மட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களே மக்களுக்கு தேவையாகவுள்ளதால் பதவி நிலைகளை கருத்திற் கொள்ளாது மக்களுக்காக செயலாற்றுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு நாள் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை அமைச்சராக இருந்தாலும் இராஜாங்க அமைச்சராக இருந்தாலும் மக்களின் நன்மைக்காகவே பணியாற்ற வேண்டும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

9ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்துவதற்காக இரண்டு நாட்கள் கொண்ட செயலமர்வு  இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

நாடாளுமன்றத்தின் கட்டளை சட்டம், சம்பிரதாயங்கள் மற்றும் குழு நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படுகிறது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறும் இந்த செயலமர்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க மற்றும் பிரதி பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டுடமை குறிப்பிடத்தக்கது.

Related posts: