கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தலைவர் தெரிவுப்பு!

Saturday, July 30th, 2022

ஆகஸ்ட் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ள தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தின் ஊடான கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதற்கு பல சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப  முகவர் நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இவ்வாறான முறைகேடுகளை மேற்கொள்ளும் நபர்களைப் பற்றிய தகவல்களைக் கண்டறியும் வகையில் கியூ.ஆர். குறியீட்டு முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தலைவர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“கியூ.ஆர். குறியீட்டு முறைமை நடைமுறையில் இருந்தாலும், குறியீட்டைக் காட்டாமல் எரிபொருள் நிரப்பும் ஊழியருக்கு பணம் கொடுத்து அல்லது வேறு ஏதாவது முறை மூலம் எரிபொருளைப் பெற முடியுமென்று பொது மக்கள் சிலர் சுட்டிக்காட்டினர்.

நாம் மூன்று முறைகளின் கீழ் எரிபொருள் நிரப்புபவர்கள் குறித்து அவதானம் செலுத்துவோம். முதலாவது எரிபொருள் அடிப்பவர் மற்றும் பெற்றுக்கொள்பவர் குறித்து நேரடியாக பரிசோதனையை செய்தல். அதாவது பொலிஸ் உத்தியோகத்தர் அல்லது பாதுகாப்பு பிரிவினரொருவரைக் கொண்டு செயற்படுத்தல்.

இரண்டாவது குறித்தவொரு வாகனம் எரிபொருள் அடித்துக்கொண்டு செல்லும்போது அந்த வாகனத்திற்கு அடிக்கப்பட்ட எரிபொருளின் அளவை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அல்லது முகாமையாளரிடம் கூறுவோம். அவர்கள் அதனை அளவிட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மூன்றாவது எரிபொருள் நிரப்பு இயந்திரம் மற்றும் எரிபொருள் நிலையத்திலிருந்த எரிபொருளின் கொள்ளவுகளை கணக்கிடுதல்.

சிலவேளை 5 லீற்றர் எரிபொருளின் அளவு வித்தியாசப்படலாம். ஆயினும் 30 லீற்றர் அளவு வித்தியாசப்பட்டால், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர். குறியீட்டின் மூலம் அல்லது முறையாக எரிபொருள் நிரப்பப்படவில்லை என்பது  உறுதிப்படுத்தப்படுகிறது.

இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் எரிபொருள் நிலைய உரிமையாளர், முகாமையாளர், எரிபொருள் நிரப்புபவர்கள் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளனர். 

கியூ.ஆர். குறியீடுகளை சிலர் பிளாஸ்டிக் அட்டைகளில் பிரதி எடுத்தும் மற்றும் வேறு சில முறைகளிலும் வைத்துள்ளார்கள். இவற்றைக் கொண்டும் எரிபொருள் நிரப்பலாம். அல்லது தங்களது கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கியூ.ஆர் குறியீடுகளை காண்பித்தும் எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம்.

இதுவரையில் நாடு பூராகவுள்ள 926 எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் பத்திரத்தின் கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் நிரப்பிக்கொள்ளவதற்காக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பொது மக்களின் வசதி கருதியே இந்த முறைமைகளின் கீழ் நாம் எரிபொருள் நிரப்புகிறோம். இதற்காக பொது மக்கள் அனைவரும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: