காற்றாடிகள் அமைக்கப்பட்ட பின்னர் பளைப் பகுதியில் மழைவீழ்ச்சி குறைந்துள்ளது – தென்னைப் பயிர்ச் செய்கையாளர்கள் கவலை!

Friday, April 27th, 2018

மின்சார உற்பத்திக்கான காற்றாடிகள் நிறுவப்பட்ட பின்னர் பளைப் பகுதியில் மழைவீழ்ச்சி கடுமையாகக் குறைந்துள்ளதாக தென்னைப் பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளர்

வட பிராந்திய தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுடனான கலந்துரையாடல் பளை கமத்தொழில் திணைக்களத்தில் நடைபெற்றது.

தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் வட பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தென்னைச் செய்கையை ஊக்குவித்தல், பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய மானிய உதவிகள், தென்னைகளைத் தாக்கும் வண்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எனப் பல்வேறுபட்ட விடயங்கள் அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டன.

இதன்போது மின்சாரத்திற்கான காற்றாடிகள் அமைக்கப்பட்ட பின்னர் பளைப் பிரதேசத்தில் மழைவீழ்ச்சி கடுமையாகக் குறைந்துள்ளது எனவும் கொடிகாமம், மிருசுவில் ஆகிய இடங்களில் மழை பெய்கின்ற போதிலும் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ள பளைப் பிரதேசத்தில் மழை பெய்யவில்லை எனவும் தென்னைப் பயிர்ச்செய்கையாளர்கள் வட பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தனிடம் முறையீடு செய்துள்ளனர்.

அத்துடன் இது குறித்து ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கதைப்பதற்கு ஏற்பாடு செய்துதருமாறு அவரைக் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரஸ்தாபிப்பதற்குரிய ஏற்பாட்டைச் செய்யும் நடவடிக்கைகளை எடுப்பதாக பிராந்திய முகாமையாளர் உறுதியளித்தார்.

இதேவேளை பளைப் பிரதேசத்தில் பத்து ஏக்கருக்கு மேற்பட்ட தென்னங்காணி உடையவர்களை இணைத்து அவர்களை ஒரு சங்கமாக இயங்க வைப்பதனூடாக பல்வேறு நன்மைகளைப் பெறமுடியும் எனவும் இங்கு கூறப்பட்டது.

Related posts:

மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படவில்லை: ஈ.பி.டி.பியால் நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு!
20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டு...
கோணாவில் யூனியன் குளப்பகுதி விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக நியாயமான தீர்வு பெற்றுத்தர...