கார்த்திகைத் திருநாள் இன்று!

Tuesday, December 13th, 2016

இன்று கார்த்திகை திருநாள் ஆகும். திருக்கார்த்திகைத் தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இந்துக்கள் தத்தமது இல்லங்களிலும் கோயில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு இனிய திருநாள் ஆகும்.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

வீடுகளில் மாலை வேளையில் முற்றத்தில் தீபங்களை ஏற்றுவதுடன் ஆலயங்களிலும் விசேட பூஜை வழிப்பாடுகள் நடைபெறும். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்கள் ஒளிப்பெறும்.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவுக்கும் இடையில் பல வருடங்களாக யார் பெரியவர் என்ற பேராட்டம் தொடர்ந்த சந்தர்ப்பத்தில் சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார்.

இதனையடுத்து அடியையும் முடியையும் தேடுமாறு அசரீரி கேட்டது. அடிமுடி தேடிக் காணமுடியாமல் போக இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று கோர, அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் மகத்தான தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை தீபம் ஆகும்.

Karthigai-Deepam1

Related posts: