காரைநகர் கைமோசக் கொலை: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

Friday, October 14th, 2016

காரைநகரைச் சேர்ந்த 77 வயதுடைய மாமியாரை தடியால் தாக்கிக் கொலை செய்த மருமகனுக்கு யாழ்.மேல் நீதிமன்று 7 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

குறித்த வழக்கு நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் தீர்ப்புக்காக நேற்று (13) எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதன்போதே இவ்வாறு தீர்ப்ப வழங்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி சம்பவம் இடம்பெற்றது. காரைநகரைச் சேர்ந்த பொன்னம்பலம் பதுமநிதி (வயது-77) என்பவரே கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்தார் என அவருடைய மருமகனான தர்மலிங்கம் சௌந்தர ராஜாவுக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் கொலை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகள் முடிவடைந்ததையடுத்து, எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, கருணை விண்ணப்பம் முன்வைத்தார். இறந்து போனவருக்கு 77வயது, இறந்தவரும் எதிரியும் மாமி – மருமகன் முறையான உறவினர்கள் என்பவற்றைக் கவனத்தில் கொண்டு, தீர்ப்பளிக்க வேண்டும் என்று எதிர் தரப்புச் சட்டத்தரணி கருணை மனுவில் கோரினார். இதனையடுத்து கொல்லப்பட்டவராகிய மாமியாரைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எதிரிக்கு இருக்கவில்லை என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கோபாவேசம் காரணமாக பூவரசம் தடியினால் அடித்ததால், மாமியார் இறந்து போனார் என்பதை சாட்சியங்களின் மூலம் காணக்கூடியதாக இருப்பதால், இந்த வழக்கின் குற்றச்சாட்டு, கைமோசக் கொலைக் குற்றச்சாட்டுக்கு மாற்றப்பட்டு, எதிரியைக் குற்றவாளி என இந்த நீதிமன்றம் தீர்பளிக்கின்றது என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்த வழக்கில், இறந்தவருடைய வயது, சம்பவம் நடைபெற்ற சூழ்நிலை, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட தடி போன்ற அனைத்தையும் கவனத்தில் எடுத்து, எதிரிக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது. 5 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால் ஒரு மாதம் மேலதிக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

court-gavel-200-seithy

Related posts: