காணி பதிவில் மோசடிகளை கட்டுப்படுத்த இலத்திரனியல் முறைமையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை !

Wednesday, July 1st, 2020

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் இலத்திரனியல் முறைமை பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் இலத்திரனியல் முறைமை பதிவு செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலத்திரனியல் முறைமை பதிவு செய்தல் நடவடிக்கை தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

காணிப் பதிவுசார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இலத்திரனியல் முறைமை பதிவின் ஊடாக உறுதிப்பத்திரம், காணி பொழிப்பு அறிக்கை கணனிமயப்படுத்தப்படும். பொழிப்பு அறிக்கை பெற்றுக்கொள்ளும்போது கணனிமயப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கும் சட்டத்தரணிகளுக்கு, பத்திரத்துறை பதிவாளர்களுக்கு மற்றும் எந்தவொரு நபருக்கு அல்லது அரச நிறுவனத்திற்கு online மூலம் காணி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் காணி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: