காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வலிமை பெற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பூரண ஆதரவு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Saturday, February 23rd, 2019

காணாமல் போன உறவுகளின் உணர்வுகளுக்கு மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காணமுடியாது. அதற்கான வழிவகைகளை அதிகாரங்களை தம்மிடம் கொண்டுள்ள தமிழ் அரசியல் தரப்பினர் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது முயற்சித்திருக்க வேண்டும். அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வலிமை பெற எமது ஆதரவையும் நாம் வழங்குகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாளையதினம் வடக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு தொடர்டர்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

யுத்தம் நிறைவுக்கு வந்து இன்று பத்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் இன்னமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமைகள் தொடர்பில் அவர்களின் உறவுகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாளாந்தம் தமக்கு தீர்வு வேண்டும் என கோரி வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். அவர்களது போராட்டத்துக்கு வாக்குவங்கிகளை மனதில் கொண்டு வெறும் ஆதரவு கொடுத்து பத்திரிகைகளில் செய்திகள் வரவேண்டும் என்பதற்கானவே அதிகாரத்தில் இருக்கும் தமிழ் அரசியல் தரப்பினர் முற்படுகின்றனர்.

ஆனால் அவர்களை கண்டறியவோ அல்லது அதற்கான வழிமுறைகளையோ அன்றி பொறிமுறைகளையோ வகுக்காமல் வெறும் அறிக்கையூடாக காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அவர்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஏன் அரசில் கைதிகளை கூட விடுவிப்பதில் அக்கறை காட்டவில்லை.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைமையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அவர்கள் தமது சுயநலன்களுக்காக ஆட்சியாளர்களுக்கு எதுவித நிபந்தனைகளையும் முன்வைக்காது தமிழ் மக்களுக்கு தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து ஆதரவு கொடுத்துள்ளனர்.

தற்போது காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தையோ அன்றி யுத்த குற்ற விசாரணைகளோ தேவையற்றதென்ற போர்வையில் தென்னிலங்கை அரசுகளுக்கு சாமரம் வீசி தமிழ் மக்களை  ஏமாற்றுகின்றனர்.

ஆனாலும் ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பிக்கப்பட காலம் முதல் மாறிமாறிவந்த தென்னிலங்கை அரசுகளாலும் ஆட்சியாளர்களாலும் மட்டுமல்லாது ஆயுதப் போராட்டங்கள் வலுவடைந்த காலகட்டங்களில் சகோதர இயக்கங்களாலும் இவ்வாறான சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை மறந்துவிடலாகாது.

ஆனால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் 1996 ஆம் ஆண்டு சூரியக் கதிர் நடவடிக்கையின் போது காணாமல் போன உறவகளை கண்டுபிடிப்பதற்காக அவர்களது உறவகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாவலர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பல உறவுகளுக்கு தீர்வுகளை பெற்றுக் முயற்சித்திருந்ததையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது மன உணர்வுகளை மதித்து அவர்களது போராட்டம் வலிமை பெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே நாளையதினம் நடைபெறவுள்ள கடையடைப்புக்கு ஈழ மக்கள் ஜநயாககட்சி பூரண ஆதரவையும் ஒத்தழைப்பையும் வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: