காசோலை கொடுக்கல் வாங்கல் மோசடி தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர் விஜயதாசவினால் விசேட குழுவும் நியமனம்!

Wednesday, February 15th, 2023

காசோலை மூலமான கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளால், நாட்டிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கவனத்திற்கொண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தனவின் தலைமையில், விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் செலவு உண்டியல் கட்டளைச் சட்டமானது 95 வருடங்கள் பழைமையானதென்றும் இச்சட்டம் 1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதென்றும் தெரிவித்துள்ள அமைச்சர், இதில் திருத்தம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களில் அதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நடைமுறையிலுள்ள தேசிய மற்றும் சர்வதேச சட்ட நிலைமை தொடர்பில் ஆராய்ந்து திருத்தங்களை தயாரிப்பதற்கு மேற்படி குழு நடவடிக்கை எடுக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தயாரித்துள்ள சட்டங்களை ஆய்வுசெய்து புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறான காசோலை மூலமான மோசடிகள் மற்றும் முறைகேடுகளால் வர்த்தகர்கள், சாதாரண மக்கள் மட்டுமன்றி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க காலத்திற்குப் பொருத்தமான வகையில் இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது அவசியமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று நீதியமைச்சில் இடம்பெற்றுள்ளது. நீதியமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன, சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம் உள்ளிட்ட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் இதில், கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: