கழிவுகளாக எறியப்படும் உணவுகளை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்குங்கள் : ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா!

Thursday, November 15th, 2018

யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதியில் காணப்படும் உணவகங்கள் மற்றும் தனியார் விடுதிகள் வீடுகளில் இருந்து கழிவுகளாக அகற்றப்படும் உணவுப் பொருட்களை வளர்ப்பு பிராணிகளுக்கும் பன்றி போன்ற மிருகங்களுக்கும் உணவாக்கி கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபையின் கழிவகற்றும் ஊழியர்களால் நாளாந்தம் பல நூறு கிலோ தொகையளவான உணவுப் பொருட்கள் கழிவகற்றும் வாகனங்களில் ஏற்றப்பட்டு குறிப்பிடப்பட்ட இடங்களில் கொண்டு சென்று கொட்டப்படுகின்றன.

இவ்வாறு கொட்டப்படுவதால் உணவுப் பொருட்கள் பல வீண்விரயமாக்கப்படுகின்றன. இந்த உணவு பொருட்களை தனியாக சேகரித்து மாநகரின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக மாற்றிக்கொள்ள முடியும்.

இதற்கான உரிய நடவடிக்கைகளை துறைசார் தரப்பினரது ஆலோசனைகளூடாக பெற்று நடைமுறைப்படுத்துவதனூடாக விலங்குகளுக்கான உணவுகளை வழங்க முடியும் என்பதுடன் உணவின்றி அலைந்து திரியும் மிருகங்களின் நலன்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.

திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களின் குறித்த யோசனையை சபை ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: