கல்வியமைச்சரின் போலியான கையெழுத்துடன் பாடசாலைகளுக்கு மாணவர் அனுமதி!

Thursday, March 30th, 2017

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் கையெழுத்தை போலியான முறையில் இட்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதித்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் கையெழுத்துடன் பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பான சிபாரிசு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் பல மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் இதுகுறித்து நேரடியாக வினவப்பட்டபோது, தனக்கு எதுவும் தெரியாதென்று மறுத்துள்ளார். அத்துடன் இது தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது கல்வி அமைச்சரின் பொதுமக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய ரஞ்சன் பண்டார என்பவர் அவ்வாறு கல்வி அமைச்சரின் கையெழுத்தை போலியான முறையில் இட்டு, பல மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவர் உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக பொலிஸ் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: