கறுப்பு ஜூலை கற்றுத்தந்த பாடங்கள்!

Thursday, July 26th, 2018

கறுப்பு ஜூலைக் கலவரம் மற்றும் வன்முறைகளிலும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கும், வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் காடையர்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் போராளிகளையும் இன்றைய நாளில் நினைவு கூர்ந்து, அவர்களின் தியாகங்களை நெஞ்சில் நிறுத்தி, தலை குனிந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

சரியாக 35 வருடங்களுக்கு முன்பு 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை நாட்டை அப்போதைய ஆட்சியாளர்களால் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான இன வெறியாட்டம் அரங்கேற்றப்பட்ட கறுப்பு நாள் இன்றாகும். யாழ். குடாநாட்டின்  திருநெல்வேலியில் இடம்பெற்ற கண்ணி வெடித்தாக்குதலில் 13 இராணுவச் சிப்பாய்கள் பலியானதும் இந்த வன்முறைகளுக்கான காரணமாக கூறப்பட்டாலும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களானது, ஆட்சியாளர்களாலும், இனவாதிகளாலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

பாதுகாப்பு படையினரின் கண்முன்னே காடையர்களால் நடத்தப்பட்ட அந்த கொலை வெறி தாக்குதல்களுக்கு பின்னால் ஒழிந்திருக்கும் சதியை எல்லோராலும் உணர முடியும்.

13 இராணுவத்தினர் பலியான சம்பவத்திற்கும், அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு எந்தவிதத்திலும் நியாயமாகாது. அந்த வன்முறைகளும், படுகொலைகளுமே இலங்கையில் உள்நாட்டுபோர் கூர்மயடைவதற்கும், முப்பது வருடங்களாக நீடிப்பதற்கான காரணமாகவும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிர் இழக்கவும் காரணமாக அமைந்திருந்தது.

தொடர்ந்த வன்முறைகளால் கோடானு கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதியாயினர். இதனால் இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேசத்தினரிடையே களங்கம் ஏற்பட்டது. இலங்கை உலக நாடுகளின் கண்டனத்திற்கும் வெறுப்பிற்கும் உட்பட்டது. இலங்கையின் ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, பொருளாதாரம் என்பன பாரிய வீழ்ச்சி கண்டது.

இலங்கை சுதந்திரம் பெற்றபோது ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் முன்னேற்றகரமான நாடாக விளங்கியது. ஆனால் எமது வடக்கு, தெற்கு அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலுக்காக இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டு, எமது நாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த இன நல்லிணக்கத்தை சிதைத்தனர். தாம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்றைய இனத்தவரை அவமதித்தும், பாரபட்சமாக நடத்தியும் எதிரிகளாக சித்தரித்து அதிகார போதையில் இன, மத நல்லிணக்கத்தை குழி தோண்டி புதைத்தனர்..

வடகிழக்கில் ஆயுதப் போராட்டம் மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. முதலில் அரசியல் கொலைகளில் ஆரம்பித்த வடகிழக்கு தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை சில தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயநல அரசியலுக்காக தூபம் போட்டு வளர்த்தனர். பின்பு நடந்தவை எல்லாம் நாடறிந்த வரலாறு ஆகும். அதிலும் 1983 ஜூலை இனக்கலவரம் இலங்கையை பெரும் அழிவை நோக்கி இட்டுச்சென்றது. அதன் விளைவை இன்னும் இலங்கை மக்கள் அனுபவித்து கொண்டு உள்ளனர்.

“வரலாற்றை நினைவு கூராதவர்கள் அதை மீண்டும் அனுபவிக்கும்படி சபிக்கப்படுவார்கள்”; என்பது என்றும் மாறாத உண்மை. இந்த கலவரத்தில் இருந்தும், அதை தொடர்ந்து ஏற்பட்ட பெரும் போரில் இருந்தும் இலங்கையர் அனுபவங்களைக் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. போர் முடிந்து 9 வருடங்கள் கடந்தவிட்ட பின்பும் இனவாத மனப்பாங்கிலிருந்து இலங்கை மக்கள் இன்னும் மீளவில்லை.

தூரதிஷ்டவசமாக இரு இனங்களிடையேயும் அதிதீவிர இனவாத அரசியல்வாதிகள் உள்ளனர். இவர்களுக்கு இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் இலாபம் அடைவதே ஒரே குறிக்கோளாகும். வடக்கிலும், தெற்கிலும் இந்த இனவாதிகள் மற்றைய சமூகங்களை எதிரிகளாக சித்தரிப்பார்கள். இனப்பூசலே இவர்களின் வாழ்வாதாரம். இவர்களுக்கு இந்த இனவாத அரசியல் இல்லாமல் உயிர் பிழைக்கவே முடியாது. “அதீத இனவாதம், அதீத தேசியவாதம் ஆகியன அயோக்கிய அரசியல்வாதிகளின் இறுதி ஆயுதம்” என்பதே உண்மையாகும்!

1983 ஜூலை கலவரத்தின் போது எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மற்றும் பல கட்சித் தோழர்களும் வெலிக்கடை சிறையில் அரசியல் கைதிகளாக இருந்தார்கள். பனாகொடை இராணுவ முகாமில் 3 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இக் கலவரம் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளையும் விட்டு வைக்கவில்லை. 1983 ஜூலை 25, 27 ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் நிறைவேற்றப்பட்ட கொடூரமான படுகொலைகளில் 54 தமிழ் போராளிகள் காடையர்களால் வெறித்தனமாகக் கொலை செய்யப்பட்டனர். அந்தக் கொலையாளிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர் பிழைக்கும் போராட்டத்தில் செயலாளர் நாயகம் அவர்களும், அவரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பனாகொடை மகேஸ்வரன் போன்ற இதர தமிழ் அமைப்புக்களின் தலைவர்களும், உறுப்பினர்களும் காடையர்களின் கொலை வெறித்தாக்குதல்களை எதிர்கொண்டு கடுமையாகப் போராடினார்கள்.

மரணத்தின் விளிம்பிலிருந்து உயிர் தப்பியவர்களாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உட்பட பனாகொட மகேஸ்வரன் போன்ற ஒருசிலர் வெலிக்கடை சிறை படுகொலைகளை கண்ணால் கண்ட உயிர்வாழும் சாட்சிகளாக எம்மோடு வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்.

பனாகொடை இராணுவ முகாமில் பல வருடங்கள் அரசியல் கைதிகளாக இருந்தபோது, அங்கு தமிழ் அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பனாகொட மகேஸ்வரன் என்று அழைக்கப்பட்ட தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் உள்ளிட்ட ஏனைய தமிழ் அரசியல் கைதிகளை ஒன்றினைத்து அந்த இராணுவ முகாமுக்குள்ளேயே தமிழ் அரசியல் கைதிகளாகிய தம்மை இராணுவ சிறையிலிருந்து சாதாரண சிறைக்கு மாற்ற வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி அதில் வெற்றியும் கண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நிராயுதபாணிகளாக இருந்த தமிழ் அரசியல் கைதிகளை அந்தக் காடையர்கள் துடிக்கத் துடிக்க படுகொலை செய்தபோது அந்த சிறை வளாகமே கண்ணீர் சிந்தியிருக்கும், சக போராளிகள் தமது கண் முன்னரே படுகொலை செய்யப்பட்டதை எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் எவ்வாறு மறக்க முடியும்? படுகொலை செய்யப்பட்ட போராளிகளின் உடல்கள் சிறை வளாகத்தில் அமைந்துள்ள புத்தர் சிலையின் முன்பு மலைபோல் குவிக்கப்பட்டிருந்தபோது, அக்குவியலில் பலர் குற்றுயிருடன் இருப்பதை அவர்களின் கைகால் அசைவிலிருந்து காணக்கூடியதாக இருந்தது என்றும், அந்த வலி நிறைந்த காட்சியை மறக்க முடியாது என்றும் சிறையிலிருந்து உயிர் தப்பியவர்கள் இப்போதும் கூறுகின்றனர்.

ஒரு பண்பட்ட, கலாச்சராத்தில் மேம்பட்ட மக்கள் ஒருநாளும் கைதிகளை படுகொலை செய்யமாட்டார்கள். வெலிக்கடை அரசியல் கைதிகளின் படுகொலை முழு இலங்கை மக்களையும் வெட்கித் தலைகுனிய வைத்த சம்பவமாகும். கைதிகளின் பாதுகாப்புக்கு பொறுப்பான அரசே தனது கடைமையை செய்யத் தவறியது. அதுவே இலங்கைக்கு பாரிய அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியது.

பல இயக்க போராளிகளின் உயிர்த் தியாகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட எமது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இறுதியில் உள்ளியக்கப் பகையாலும், சக இயக்க முரண்பாடுகளாலும், தலைமைப் போட்டிகளாலும் திசைமாறி, பயங்கரவாதமாக உருமாறி உலக நாடுகளால் தடைசெய்யப்பட்டது.

இறுதியில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழ் மக்களின் உயிர் இழப்புக்களுடன் முடிவுக்கும் வந்தது. “வீரத்தின் பெரும் பகுதி விவேகம்தான்” எனும் உண்மை எமது ஆயுத இயக்கத் தலைமைகளுக்கு இறுதிவரை புரியவே இல்லை.

இனி தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் விவேகத்தையும், சாதுரியத்தையும் சாணக்கியத்தையும் கையாண்டு தமிழ் மக்களை அரசியல் பின்னடைவிலிருந்தும், பெரும் பொருளாதார பின்னடைவிலிருந்தும் மீட்டெடுப்பதேயாகும். தமிழ் மக்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட்டு மீண்டும் இந்நாட்டில் தலைநிமிர்ந்து வாழ சரியான பாதையைக் காட்டியும், அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும் இரு கண்களைப்போன்று சமாந்தரமாக முன்னெடுத்து விரைவான மீள் எழுச்சிக்கு யார்? நடைமுறைச்சாத்தியமான பாதையை வகுத்துச் செயற்படுகின்றார்களோ அவர்களே தற்போதைய சூழலில் தமிழ் மக்களுக்கு தேவையான தலைவர்களாக இருக்க முடியும்.

ஆயுதப் போராட்டங்கள் தோற்றுப்போயிருக்கலாம், ஆனால் தமிழர்கள் தோற்றுப்போனவர்களல்ல என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். காற்று திசைமாறும் போது பாயை திருப்பிக் கட்டும் படகோட்டி போல தமிழ் மக்களும் மாறியிருக்கும் சூழலுக்கேற்ப புதிய பாதையை வகுக்க வேண்டும். இதுவே இன்றைய மிக அவசியத் தேவையாகும். அதுவே தமிழ் மகக்ளின் உரிமைகளுக்காகவும், கௌரவமான எதிர்காலத்திற்காகவும் தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து தமிழ் போராளிகளினதும், அப்பாவி பொது மக்களினதும் தியாகங்களுக்கு நாம் செய்யும் சமர்ப்பனமாகும்.

நாடும், மக்களும் சுபிட்சமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டுமாக இருந்தால், இன மத நல்லிணக்கம் மிக மிக அவசியமாகும். இனவாதிகள் கூறுவது போல இன நல்லிணக்கமும் தேசிய பாதூகாப்பும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல.

இன நல்லிணக்கம், சமாதானம் கட்டியெழுப்பப்படுவதே தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும். எனவே இலங்கை மக்கள் அனைவரும் இனவாதத்தையும், இனவெறுப்பையும் நிராகரித்து மனிதநேயத்தை நேசிக்க வேண்டும்.

அதற்கு அடிப்படையாக அரசாங்கம், சர்வதேசத்திடம் ஏற்றுக்கொண்ட நிலைமாறுகால நீதியை பாதிக்கப்பட்ட மக்கள் உணருகின்றவகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான அடிப்படைக்காரணங்களாக இருக்கும் அரசியல் உரிமைகளுக்கான தீர்வானது சட்ட வலுவோடு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும், போரின்போது நடைபெற்றதான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நம்பகத்தன்மையான பொறிமுறை ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், உரிய பரிகாரம் காணப்படவும் வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக காலத்திற்கு காலம் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் முன்னிலையில் தமிழ் மக்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் நீதியான முறையில் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை வெளிப்படையாக கூறவேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும், சிறைகளில் நீண்டகாலமாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணி, நிலங்களில் இருந்து படையினர் முற்றாக வெளியேறி உரியவர்களிடம் அவை ஒப்படைக்கப்பட வேண்டும். போன்ற பெறுமதியான காரியங்களை அரசாங்கம் செய்து முடிக்க வேண்டும்.

பல இன மத மக்கள் வாழும் பல நாடுகள் எவ்வித இனப்பிரச்சனையும் இன்றி சமாதானமாக சுபீட்சமாக வாழும் போது, ஏன் இலங்கையில்; மட்டும் அது முடியாது என்பதே எம்முன்னால் உள்ள பெருங்கேள்வியாகும்.  வேற்றுமையிலும், ஒற்றுமை காண்பதே எமது நாட்டிற்கு அமைதியையும் வெற்றியையும் தரும். இலங்கையராக இருப்பதற்காக தமிழர் என்பதை விட்டுக்கொடுப்பதற்கோ, தமிழராக இருப்பதற்காக இலங்கையர் என்பதை விட்டுக்கொடுப்பதற்கோ நாம் தயாராக இல்லை. இலங்கையராகவும் அதேநேரம் தமிழராகவும் இருக்கவுமே விரும்புகின்றோம் என்பதை இந் நாளிலும் உரக்கச் சொல்வோம்

Related posts: