கம்பஹாவில் தொடர்ந்தும் முடக்கநிலை: அரச மற்றும் தனியார் வங்கிகி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை திறக்க அனுமதி!

Sunday, October 25th, 2020

கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் கம்பஹா மாவட்டத்தின் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (26) திறக்கப்படவுள்ளன. நிறுவன அடையாள அட்டையை காண்பித்து ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (26) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, பயாகல, அளுத்கமவுக்கான ஊடரங்கு நாளை திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை- மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதவத்த, மகாலந்தாவ தெற்கு, மகுருமஸ்வில, குலா விட்ட வடக்கு மற்றும் குலாவிட்ட தெற்கு ஆகிய 5 கிராமங்களுக்கே இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியவத்த கிராமத்திலும் சுமார் 50 வீடுகளுக்குப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாததாக மாறலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை, தெரிவு செய்யப்பட்ட பகுதிகளிலேயே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், மக்கள் தொடர்ந்தும் ஏனையவர்களுடன் அதிகளவில் தொடர்புகொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரணச்சடங்குகள், திருமணங்கள், மத நிகழ்வுகள் மூலம் கொரோனா ரைவஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: